பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்443

காய்ந்த சாயகம் நாழிகை கட்டி - (பகைவர்களைக்) கொல்லுகிற அம்புகளையுடைய
தூணிகளை (இரண்டு தோட்புறத்திலுங்) கட்டிக் கொண்டு, அ காண்டிவம் கரத்து
ஏந்தி- அந்தக் காண்டீவ மென்னும் வில்லைக் கையிலெடுத்துக்கொண்டு, வேய்ந்த
மா மணிகவசம் உம் (ஏந்தி)- இழைத்த சிறந்த இரத்தினங்களையுடைய கவசத்தையுந்
தரித்துக்கொண்டு, அருக்கனில் அழகுஉற மேற்கொண்டான் - சூரியன்போல
அழகுமிகும்படி அத்தேரின்மேல் ஏறினான்; (எ-று.)

     அருச்சுனனுக்கு - சூரியனையும், அவன் தேர்ப்பாகனுக்கு - அருணனையும்
உவமைகூறினார். அருச்சுனன் வலக்கையினால்மாத்திரமின்றி இடக்கையினாலும்
அம்புதொடுக்குந் திறமுடையனாய்ச் சவ்வியசாசியென்று பேர்பெற்றவ னாதலால்,
அதற்கு ஏற்ப இரு புறத்தும் இரண்டு அம்பறாத்தூணிகளைக் கட்டிக்கொண்டன
னென்க: இரண்டு அக்ஷயதூணீரங்களைத் தந்தனனென்றுமுதனூலாசிரியர்
வெளிப்படையாக் கூறியுள்ளார்.                                  (748)

    28.-அருச்சுனன் நாணியைக் கைவிரலால் தெறித்து ஒலியெழுப்புதல்.

நெஞ்சின்மேலிடுமூக்கமோடணிதிகழ் நெடும்புயம்பூரித்துச்
சிஞ்சினீமுகந்தெறித்தனன்றெறித்தலுந் தெறித்தபேரொலிகானின்
விஞ்சிவாழ்வனசத்துவமடங்க வுள்வெருவுறவுகாந்தத்து
மஞ்சினீடுருமொலியெனப்பரந்தது வான்முகடுறமன்னோ.

     (இ-ள்.) (அருச்சுனன்), நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு - மனத்தில்
அதிகப்படுகிற உற்சாகத்துடனே, அணி திகழ் நெடு புயம் பூரித்து -
அழகுவிளங்குகின்ற நெடிய தோள்கள் (அவ்வுற்சாகத்தாற்) பூரிக்கப் பெற்றவனாய்,
சிஞ்சினீமுகம் தெறித்தனன் - (தான் கைக்கொண்ட வில்லினது) நாணியினிடத்தை
(க்கைவிரலால்) தெறித்தான்; தெறித்தலும் - அங்ஙனம்தெறித்தவுடனே, தெறித்த -
(அதனினின்று) வெளிப்பட்ட, பேர்ஒலி - மிக்க  ஒலியானது,- கானின் -
அக்காண்டவவனத்தில், விஞ்சி வாழ்வன - மிகுதியாக வாழ்வனவாகிய, சத்துவம்
அடங்க - பிராணிகளெல்லாம், உள்வெருவுற - மனமஞ்சும்படி, உக அந்தத்து
மஞ்சின்நீடு உரும் ஒலி என - யுக முடிவு காலத்திற் பெருமழை சொரிகிற
மேகத்தினின்றுமிகுதியாக உண்டாகிற இடியினது ஓசைபோல, வான் முகடு உற -
மேலுள்ளஆகாயமுகட்டையளாவ, பரந்தது - பரவிற்று; (எ-று.)-மன், ஓ -
ஈற்றசைகள்.

     அருச்சுனன் வில்நாணியைத் தெறித்த ஒலியானது காட்டு மிருகங்களெல்லாம்
அஞ்சியோட யுகாந்தகாலத்து மேகத்தினிடிபோல வானமுகட்டை யளாவியதென்க.
சிஞ்சினீமுகம் - நாணியினிடம். வாழ் வன சத்துவம் என்றும் பிரிக்கலாம்.   (749)

29.- அக்கினி வளர்ந்து அவ்வனத்தை யெரிக்கத்
 தொடங்குதல்.

ஆழிவாயொருவடவையின்முகத்திடை யவதரித்தனனென்ன
ஊழிவாயுலகனைத்தையுமுருக்குமா றுடன்றெழுந்தனனென்ன
வாழிவாழியென்றருச்சுனன்கரத்தையும் வார்சிலையையும்வாழ்த்திப்
பாழிமேனியைவளர்த்தனன்பாவகன் பவனனும்பாங்கானான்.