பக்கம் எண் :

444பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) பாவகன்- அக்கினிதேவன்,- ஆழிவாய் - கடலில், ஒரு வடவையின்
முகத்திடை - ஒரு பெண்குதிரையின் முகத்தில், அவதரித்தனன் என்ன - பிறந்தவன்
போலவும்,- ஊழிவாய் - ஊழிக்காலத்தில், உலகு அனைத்தைஉம் முருக்கும் ஆறு -
உலகங்களை யெல்லாம் அழிக்கும்படி, உடன்று எழுந்தனன் என்ன -
உக்கிரங்கொண்டு எழுந்தவன்போலவும்,- அருச்சுனன் கரத்தைஉம் 
வார்சிலையைஉம்வாழி வாழி என்று வாழ்த்தி - அருச்சுனனது கையையும்
(அக்கையிலுள்ள) நீண்டவில்லையும் 'வாழ்க வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே,
பாழி மேனியை வளர்த்தனன்- வலிமையையுடைய (தன்) உடம்பை வளரச்செய்தான்;
பவனன்உம் பாங்கு ஆனான்- (அவள்வளர்ந்து தொழில்செய்தற்கு) வாயுவும்
உதவியாய் நின்றான்; (எ-று.)

     படபாமுகாக்கினி போலவும் ஊழித்தீப்போலவும் அக்கினிதேவன் அப்பொழுது
வளர்ந்தெழுந்தனன்: அவனுக்கு அநுகூலமாகக் காற்றும் அமைந்து உதவுவததாயிற்று
என்பதாம். கடலிடையிலுள்ளதொரு பெண்குதிரையின் முகத்தில் ஒரு பெருந்தீ
யமைந்துள்ளதென்றும், அது கடல்நீரை மழைமுதலியவற்றால் மிகாதபடி
உறிஞ்சிநிற்பதென்றும், அத்தீக் கற்பாந்தகாலத்து மேலெழுந்து வெளிப்பட்டு
உலகங்களையெரிப்பதென்றும் நூற்கொள்கை.                         (750)

30.- அக்கினி அவ்வனத்தை வளைத்துக்கொள்ளுதல்.

மூளமூளவெம்பசியொடுஞ்சினத்தொடு முடுகிவெய்துறவோடி
வாளமாகவொர்பவளமால்வரைநெடு வாரியைவளைந்தென்னக்
காளமாமுகிலூர்திநந்தனநிகர் காண்டவந்தனையண்ட
கோளமீதெழவளைந்தனன்வரைபடி கொண்டலுங்குடர்தீய.

     (இ-ள்.) ஒர் பவளம் மால் வரை - பவழமயமானதொரு பெரிய மலை, நெடு
வாரியை வாளம் ஆக வளைத்து என்ன - பெரிய கடலை வட்டமாக வளைந்து
சூழ்ந்தாற்போல, (அக்கினியானவன்), மூளமூள வெம் பசியொடுஉம் சினத்தொடுஉம்
முடுகி வெய்து உற ஓடி - கொடிய பசியும் கோபமும் மேன்மேல் அதிகப்பட
அவற்றுடனே விரைவாக (க் காண்பார்க்கு) அச்சம்மிகும்படி ஓடி, காளம் மா முகில்
ஊர்தி நந்தனம் நிகர் காண்டவந்தனை- கரிய பெரிய மேகங்களை
வாகனமாகவுடையவனான இந்திரனது நந்தவனத்தை யொத்த காண்டவ வனத்தை,
வரை படி கொண்டல்உம் குடர் தீய - (அதிலுள்ள) மலைகளிற் படிந்துகிடக்கிற
மேகங்களும் குடல்கருகும்படி, அண்ட கோளம் மீது எழ வளைந்தனன் -
அண்டகோளத்துக்கும் மேலே உயர்வாக வளைந்துகொண்டான்; (எ-று.)

     நந்தனம் - சுவர்க்கலோகத்திலுள்ள இந்திரனதுபூந்தோட்டம் சினம்
மேன்மேல்மூளுதற்குக் காரணம், முன்புபலமுறை அவ்வனத்தை அக்கினிதேவன்
தான்எரிக்கத்தொடங்கியபொழுது அதிலுள்ள பிராணிகள் எதிர்த்து மாறுசெய்து
தன்னையடக்கிவிட்டமை. கரிய பெரிய கட்டைப் பெரிதாயெழுந்த சிவந்த நெருப்பு
வளைதற்கு,கடலைப் பவழமலை வளைதல் ஒப்பாக் குறிக்கப்பட்டது.