47.- இந்திரன் தக்ஷகனைக்குறித்துக் கவலைப்படுதல். தானவர்புரங்கணீறெழமுனிந்த தமனியச்சிலைக்கைவெள்ளூர்தி யானவனமதுபுரத்தையுஞ்சுடுவா னழன்றனன்போலுமென்றஞ்சி வானவர்நடுங்கவானவர்க்கரசாம் வலாரியுமனனுறத்தளர்ந்து கானவருடனேதக்ககனென்னுங் கட்செவிகெடுமெனக்கரைந்தான். |
(இ-ள்.) 'தானவர் - அசுரர்களுடைய, புரங்கள் - (முப்) புரங்களும், நீறு எழ -சாம்பராய்ச்சிதறும்படி, முனிந்த - கோபித்து எரித்த, தமனியம் சிலை கை - பொன்மயமான (மேரு) மலையாகிய வில்லையேந்தியகையையுடைய, வெள் ஊர்தி ஆனவன் - வெண்ணிறமான ரிஷப வாகனத்தையுடையவனான சிவபிரான், நமது புரத்தைஉம் சுடுவான் அழன்றனன் போலும் - (தேவர்களான) நமது நகரத்தையும் எரிக்கும்படிகோபங்கொண்டனன்போலும், ' என்று - என்று எண்ணி, வானவர் அஞ்சி நடுங்க - மேலுலகத்தார்பயந்து (உள்ளமும் உடலும்) நடுக்கமடைய,- வானவர்க்கு அரசு ஆம் வலாரிம் - அத்தேவர்கட்கு அரசனான இந்திரனும், கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என - 'அக்காட்டி லுள்ளாருடனே (அங்கு வசிப்பவனான)தக்ஷகனென்னும் பாம்பு அழிந்திடுமே! ' என்று சிந்தித்து, மனன் உற தளர்ந்து கரைந்தான் - மனம் மிகத்தளர்ந்து உருகினான்; (எ-று.) சிவபிரான் காலாக்கினிசொரூபி யாதலால் அந்நெருப்பைச் சிவசொரூபமாகக் கருதின ரென்றும், காண்டவமெரிக்கிற தீயை முன்பு முப்புரமெரித்த சிவபிரானது நகைத்தீப் போன்றதெனக் கருதின ரென்றுங்கொள்க. இரட்டுறமொழித லென்னும் உத்தியால் சிலை யென்பதற்கு மலையென்றும், வில்லென்றும் இரு பொருள் ஒருங்கு கொள்ளப்பட்டன. வெள்ளூர்தி-அன்மொழித்தொகை. தமனியம் = தபநீயம்; நெருப்பில்தபிக்கப்பட்டு விளங்குவதென்றும், வலாரியென்பது - வலனென்னும் அசுரனுக்குப்பகைவனாய் அவனை யழித்தவனென்றும் பொருள்படும். கட் செவி - கண்களையேகாதுகளாக வுடையது; பண்புத்தொகையான்மொழி: பாம்புக்கு, கண்ணென்னும்பொறியொன்றிலேயே செவிப்புலனாகிய கேள்வியும் இருக்கு மென்ப. (768) 48.- இந்திரன்தீயையவிக்கும்படி மேகங்களையேவித் தான் தேவசேனையுடன் போர்க்குப்புறப்படுதல். பரந்தெழுபுகையாற்றத்தமவடிவம் பண்டையிற்பதின்மடங்காகச் சுரந்திடும்புயல்களனைத்தையுநெடுநீர் சொரிந்தவித்திடுகெனச்சொல்[லி நிரந்தரமருகுவிடாதுதன்னிழல்போ னின்றவானவரையுமேவிப் புரந்தரன்றானுமீரிருமருப்புப்பொருப்பின்வெம்பிடர்மிசைப்புகுந்தான். |
(இ-ள்.) புரந்தரன் - இந்திரன்,- பரந்து எழு புகையால் தம்வடிவம் பண்டையின்பதின்மடங்கு ஆக சுரந்திடும் புயல்கள் அனைத்தைஉம் - பரவியெழுகிறஅவ்வனற்புகையினால் தங்கள் தங்களுடைய உருவம்முன்னையினும் பத்து மடங்குஅதிமாக வளர நீர் சுரக்கப்பெற்ற மேகங்களெல்லாவற்றையும்நோக்கி, நெடு நீர்சொரிந்து |