தேனுவைக்கவர்ந்த பிரபாசனென்ற வசுவைப் பெண்ணின்ப மற்றிருக்கும்படி வசிட்டமுனிவன் சபித்தா னாதலால், 'தந்தை யாம் விழைவும் குலத்தவமுனியருளினால்இவனுக்கு இல்' என்றாள். சாபத்தை 'அருள்' என்றது- இங்ஙன்சாபம் தராவிடில்அந்தத் தீவினைப்பயனை வேறு வகையாக நுகரவேண்டி வருமாதலாலும், அங்ஙன்இல்லாதபடி செய்ததனாலுமாம். 'அக்குலத்தவமுனியருளினால்' என்றது - முன்னும்பின்னும் இயைதலால், மத்திமதீபம். 'தந்தையால்' எனவும்பாடம். (83) 76.- 'இன்னமொரு புதல்வனைப்பெற்றபின் விண்ணுலகு சேரலாம்' என்று மன்னவன் கங்கையாளிடம் கூறுதல். மன்னவர்தொழுகழன் மன்னன்மைந்தனோடு இன்னமுமொருவனை யினிதளித்துநாம் பன்னகநெடுமுடிப் பார்களிக்கவே பொன்னகரிருவரும் போதுமென்னவே. |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ - ள்.) மன்னவர் தொழு கழல் மன்னன் - அரசர்கள் வந்து வணங்குகின்றபாதங்களையுடைய சந்தனுராசன், 'மைந்தனோடு - இந்தப்புதல்வனுடனே, பன்னகம்நெடு முடி பார் களிக்க - ஆதி சேஷனுடைய நெடிய தலைமீதிருக்கும் பூமிகளிக்கும்படி, இன்னமும்-, ஒருவனை - ஒருபுத்திரனை, இனிது அளித்து - இனிதுதந்து, (பிறகு), நாம்-, இருவரும்-, பொன் நகர் - தேவலோகத்துக்கு, போதும் -போவோம்,' என்ன - என்று (தன் கருத்தைத்) தெரிவிக்க-; (எ -று.) இச்செய்யுளில்,என்ன என்பது மேல் 78 ஆம் கவியில் வரும் 'எனா' என்பதோனோடு இயைய, அது 'தழீஇ ஏகினாள்' என்று தொடர்ந்து முடியும். இப்போது பிறந்துள்ளபுதல்வன் பெண்ணின்பமற்று வைராக்கியசாலியாக இருத்தற்கு உரியவனாதலால், சந்ததி விருத்தி செய்பவனாய்ப் பூமியை யாளுதற்கு ஏற்றமற்றொருபுதல்வனைப் பெற்றபின் இருவரும் விண்ணுலகஞ் செல்வோமென்று கங்கையாளிடம் சந்தனு தன் கருத்தினைத் தெரிவித்தானென்க. 'அளித்தும்' என்று எடுப்பின், தன்மைப்பன்மை வினைமுற்றாம். ஆதிசேஷன் உலகின் கீழிலிருந்து தாங்குகின்றானென்ற ஒருசார் நூற்கொள்கைபற்றி, 'பன்னகநெடுமுடிப்பார்' என்றது. (84) 77.- கங்கையாள் சந்தனுவைநோக்கி 'பலவகைப்போகங்களையும் நுகர்ந்து அரசியலைநிறுத்திப் பின்பு மீளுக' எனல். போயிருந்தென்பயன் போகம்பல்வகை ஆயிருந்தனவெலா மருந்தியின்னமும் மாயிருந்தரணியின் மன்னுசில்பகல் நீயிருந்தரசிய னிறுத்திமீளுவாய். |
|