பக்கம் எண் :

தற்சிறப்புப்பாயிரம்5

     (இ - ள்.) கன்னபாகம் - காதின் பகுதி, மெய் களிப்பது - உண்மையான
மகிழ்ச்சியை யடைதற்குக் காரணமான, அளப்பு இல் - அளவில்லாத (மிக்க), ஓர்
தொல் கதை - ஒரு பழமையான கதையை, முன் - முன்னே, சொன்ன-, பாவலன் -
கவி, துகள் அறு சுகன் திருத்தாதை - குற்றமற்ற சுகனுடைய சிறப்புற்ற தந்தையான
வியாசனாவன்; அன்ன பாரதம் தன்னை - அந்தப் பாரதத்தை, ஓர் அறிவுஇலேன்
உரைப்பது - சிறிது அறிவும் இல்லாத நான் சொல்லுவது,- என்ன பாவம் - என்ன
தீச்செயல்! இன்று - இப்போது, உலகு - உலகோர், என்னை - (தகாத செயலில்
மூண்டுள்ள) என்னை, என் சொலாது - என்ன சொல்லமாட்டார்? ( எ -று.)

     கன்னபாகம் = கர்ணபாகம்: வடசொற்றொடர். மெய் - உடலுமாம். பாவம் -
பாபம் என்ற வடசொல்லின் திரிபு: பாவம் என்ற வடசொல்லின் திரிபு
எனக்கொண்டு,என்ன அபிப்பிராயம் என்றுமாம். மற்று -அசை.          (5)

6.மண்ணிலாரணநிகரெனவியாதனார்வகுத்த
எண்ணிலாநெடுங்காதையையானறிந்தியம்பல்
விண்ணிலாதவன்விளங்குநீடெல்லையையூமன்
கண்ணிலாதவன்கேட்டலுங்காண்டலுங்கடுக்கும்.

     (இ - ள்.) மண்ணில் - பூமியிலே, 'ஆரணம் - வேதத்துக்கு, நிகர் - ஒப்பு
ஆகும், ' என - என்னுமாறு, வியாதனார் - வியாச முனிவர், வகுத்த - விரிவாகச்
சொல்லியருளிய, எண் இலா - அளவில்லாத (மிகப் பெரிய), நெடுங் காதையை -
நீண்ட(பரந்த) கதையை, யான் அறிந்து இயம்பல் - யான் தெரிந்துகொண்டு
சொல்லுதல்,- விண்ணில் - ஆகாயத்திலே, ஆதவன் - சூரியன், விளங்கு -
விளங்குகின்ற, நீடுஎல்லையை - நீண்டவரம்பை, ஊமன் கேட்டல்உம் -
ஊமையானவன் வினவியறிதலையும், கண் இலாதவன் - குருடன், காண்டல்உம் -
கண்டறிதலையும், கடுக்கும் - ஒத்திருக்கும்; (எ - று.)

     ஊமன் கண்ணிலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும்-
முறைநிரனிறைப்பொருள்கோள்.                               (6)

7.முன்சொலாகியசொல்லெலாமுழுதுணர்முனிவன்
தன்சொலாகியமாப்பெருங்காப்பியந்தன்னைத்
தென்சொலாலுரை செய்தலிற்செழுஞ்சுவையில்லாப்
புன்சொலாயினும்பொறுத்தருள்புரிவரேபுலவோர்.

     (இ - ள்.) முன் சொல் ஆகிய சொல் எலாம் - முற்பட்ட சொல்லாகிய
வேதம்முழுவதையும், முழுதுஉணர் - ஒன்றுவிடாமல் நன்கு அறிந்த,
முனிவன்தன் -வியாசமகரிஷியின், சொல்ஆகிய - வாக்காகிய, மாபெருங்
காப்பியந்தன்னை - சிறந்தபெரிய காப்பியமாகிய பாரதத்தை, தென் சொலால் -
தமிழ்மொழியினால், உரைசெய்தலின் - சொல்லுதலினால், செழுஞ்சுவை இல்லா
புல் சொல் ஆயின்உம்-(என்னுடைய சொல்) மிக்க சுவையில்லாத இழிவாகிய
சொல்லாயிருப்பினும், புலவோர் -வித்துவான்கள், பொறுத்து அருள்புரிவர் -
பொறுமைகொண்டு கருணை செய்வார்கள்;(எ - று.)