பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்55

90.- இளவரசனான தன்மகனை அரியாசனத்திருத்தி,
சந்தனு ஒருகால் வேட்டைக்குச் செல்லல்.

தானுமம்மகனுந்தரியலர்வணங்கத் தங்குநன்னாளிலங்கொருநாள்
தேனுறுந்தொடையலிளவரசனைத்தன் றிகழரியாசனத்திருத்திக்
கானுறுவிலங்கினுயிர்கவர்நசையாற் காற்றெனக்கூற்றெனநடந்து
பானுவின்மகளாங்காளிந்திநதியின் பாரமெய்தினன்விறற்படையோன்.

     (இ-ள்.) தான் உம் - சந்தனுவும், அ மகன் உம் - (தேவவிரத னென்ற)
அந்த(க் கங்கையின்) புத்திரனும், தரியலர் வணங்க - பகைவர்கள் (அஞ்சி)
வணங்குமாறு,அங்கு - அந்நகரிலே, (பெருமதிப்போடு), தங்கும் - தங்கியிருக்கப்
பெற்ற, நல் நாளில்- சிறந்த நாள்களுள், ஒருநாள்-, தேன் உறுந் தொடையல்
இள அரசனை - தேன்பொருந்திய மாலையையணிந்த இளவரசனாகிய
தேவவிரதனை, தன் திகழ் அரிஆசனத்து இருத்தி - தன்னுடைய விளங்குகின்ற
சிங்காசனத்திருக்கச்செய்து,- கான்உறு விலங்கின் உயிர் கவர் நசையால் -
காட்டில் தங்குகின்ற மிருகங்களின் உயிரைக்கவரவேணுமென்ற விருப்பினால்,
விறல் படையோன் - வலிமையுள்ள(வேட்டைக்குரிய) பரிவாரங்களோடு
கூடியவனாகி,-காற்று என கூற்று என நடந்து-(இவன்) காற்றும் யமனும்
(போல்வான்) என்று சொல்லுமாறு (விரைவாகவும் கொடுமைதோன்றவும் )
நடந்துபோய்,- பானுவின் மகள் ஆம் காளிந்தி நதியின் -சூரியபுத்திரியான
யமுனாநதியின், பாரம் - கரையில், எய்தினன் - (அடைந்து அங்குஅமைந்த
பாசறையிற்) சேர்ந்தான்; (எ-று.) - தங்குநாடன்னில், இளவரசென என்றும்
பாடம்.

     சந்தனு காளிந்திக்கரையில் அமைத்த பாசறையிற்சேர்ந்திருந்தமை,
மேற்கவியிற்பெறப்படும். கானுறுவிலங்கினுயிர் கவர் நசை - வேட்டை விருப்பம்.
காளிந்திநதிக்குஉரிய பெண்தெய்வம், சூரியனுடைய புத்திரியாவள்.       (98)

91.- கானகத்தில் யோஜநகந்தியைக் கண்டு சந்தனு
மன்னவன் காதல்கொண்டு வினவுதல்.

பாசறைமுழுதுமொருபெருங்கடவுட் பரிமளமொல்லெனப்பரப்பி
யோசனையளவுங்கரையிருமருங்கு முயிர்க்குமெல்லுயிர்ப்பெதிரோடித்
தாசர்தங்குலத்துக்கதிபதியளித்த தையலைத்தரணிபர்க்கெல்லாம்
ஈசனுமுருகிக்கண்டுளங்களியா விலங்கிழையார்கொனீயென்றான்.

     (இ-ள்.) (அங்ஙன் கானகஞ்சேர்ந்து பாசறையில் தங்கியிருக்கையில்), பாசறை
முழுதுஉம் - (தங்கியிருந்த) படைவீடுமுழுவதும், ஒரு பெருங் கடவுள் பரிமளம் -
ஒப்பற்ற மிக்கதெய்வத்தன்மையுள்ள நறுமணத்தை, ஒல்லென பரப்பி -
விரைவாகப்பரப்பிக்கொண்டு, யோசனை அளவுஉம் - யோசனைதூரமும், கரை
இருமருங்குஉம் -(அந்த யமுனாநதியின்) கரையினிருபக்கங்களிலும், உயிர்க்கும் -
வீசுகின்ற, மெல்உயிர்ப்பு - மெல்லியகாற்றுக்கு, எதிர் ஓடி - எதிர்முகமாக
விரைந்துசென்று,-தரணிபர்க்கு எல்லாம் ஈசன்உம் - அரசர்க்கு அதி