போன்ற சாயலையுடைய அம்பை,- புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் - மேகத்திலிராத [தனிப்பட்டுள்ள] மின்னலையொத்த உடம்பில், ஒளி புரி - ஒளிமிக்க,இயக்கி தனது - தருமதேவதையின், அருளினான் - கருணையினால், தனது வடிவுஅகற்றி - தன்னுடைய அந்தவடிவத்தை யொழித்து, இகல் யாகசேனனது வயினிடை -வலிமையையுடைய யாகசேனனுடைய இடத்திலே, செயலில்- (தன்னுடைய)வீரச்செய்கையினால், ஆறுமுகன் நிகர் என தகு - அறு முகக்கடவுள் ஒப்பாவனென்றுசொல்லத்தகுமாறு, சிறக்க - சிறப்புற்றிருக்க, சிகண்டி ஆயினள் - சிகண்டியானாள்; (எ-று.) அம்பை தவஞ்செய்து அத்தவத்தின்பயனால் வீடுமனைக் கொல்லுமாறு அந்தவடிவத்தை நீங்கிச் சிகண்டி யென்ற பேர் பெற்றுத் தேவசேனாபதியான அறுமுகக்கடவுளுக்கு ஒப்பான பராக்கிரமச் செயலுடனே துருபதனிடத்துத் தோன்றினளென்க. யாகசேனன் - துருபதன். முயல் - முயல்வடிவாகத் தோன்றுங் களங்கத்துக்கு,ஆகுபெயர். முயலிலாமதி, புயலிலாத மினல் - இல்பொருளுவமை.வீடுமன்பரசுராமனோடுபோர்புரிந்ததுமுதலியஇந்தச் சரித்திரம் பாலபாரதத்து இல்லை:வியாசபாரதத்திலும் உத்தியோக பருவத்திலுள்ளது. மயலிலாடனது என்றும்பாடம். (154) 147.- விசித்திரவீரியன் இன்பமனுபவித்து, க்ஷயரோகத்தால் விண்ணுலகடைந்தமை. மணிமுடிக்குரிய நிருப னுங்கடிகொண் மாதர் தங்களை மகிழ்ச்சியால், அணிபெ றத்தழுவி யின்ப வேலையி னழுந்தி நாள்பல கழிந்த பின், பிணிக ளுக்கரசெ னும்பெ ரும்பிணி பிணித்து வாழ்வினி நணித்தெனப், பணிமு டிப்புவி யிரங்க வைகியொரு பற்றி லாதநெறிபற்றினான். |
(இ-ள்.) மணி முடிக்கு உரிய நிருபன்உம் - அழகிய கிரீடத்துக்கு உரியவனானவிசித்திரவீரியனும், கடிகொள் - விவாகத்திற் கொண்ட, மாதர் தங்களை - (அம்பிகைஅம்பாலிகை என்ற) மகளிரை, மகிழ்ச்சியால் - மனமகிழ்ச்சியோடு, அணி பெற தழுவி- அழகுபொருந்த ஆலிங்கனஞ் செய்துகொண்டு, இன்பம் வேலையின அழுந்தி -இன்ப சமுத்திரத்திலே முழுகி, பலநாள் கழிந்த பின் - பலநாள் நீங்கினபின்,பிணிகளுக்கு அரசு எனும் - நோய்களுக்கு அரசனென்று சொல்லத்தக்க, பெரும் பிணி- கொடிய வியாதியினால், பிணித்து - கொள்ளப்பெற்று, இனி வாழ்வு நணித்துஎன - இனி மேலுலகவாழ்க்கை சமீபித்திட்டது என்று கருதி, பணி முடி புவிஇரங்க - ஆதிசேஷனது சிரசிலே யுள்ள பூமியிலுள்ளார் இரக்கங்கொள்ள, வைகி - தங்கியிருந்து, ஒரு பற்று இலாத நெறி - பற்றைவிட்டு அடையப்படும் இடமான வானுலகத்தை, பற்றினான் - அடைந்திட்டான்; ( எ-று.) ராஜயக்ஷ்மா என்ற க்ஷயரோகம் மிகுபோகத்தால் விசித்திர வீரியனுக்குத் தோன்ற, அதனாலே யிறந்து வானுலகடைந்தனன் அந்த அரச னென்க. (155) குருகுலச்சருக்கம் முற்றிற்று. ------------ |