உத்தியால், மேலுலகங்களேழும் கீழுலகங்களேழு மென இருவகையும் ஒருங்குகொள்ளினும் அமையும். மேலேழுலகங்களாவன:- பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்யலோகம் என்பன. கீழேழுலகங்களாவன:- அதலம் விதலம் சுதலம் தராதலம் ரசாதலம் மகாதலம் பாதாளம் என்பன. ஜம்பூ பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம் சால்மலிபுஷ்கரம் என்ற ஏழுதீவுகளாகவுள்ள பூமிமுழுவதும் என்றலுமொன்று; இவ்வுரைக்கு 'உலகு' என்றது, உலகத்தின் ஒரு பகுதியை யுணர்த்தியதெனக் கொள்ளவேண்டும்; "மாயோன்மேயகாடுறை யுலகமும்" என்ற தொல்காப்பியத்தில் 'உலகம்' என்பது போல. (6) 7.- மயன், மண்டபம்கட்டிமுடித்து வீமனுக்குக் கதாயுதத்தையும், அருச்சுனனுக்குச்சங்கத்தையும் கொடுத்தல். மனத்தாலுந் திருத்தகுநூல்வரம்பாலு முரம்பயிறோள் வலியினாலு, மினத்தாலுந் தெரிந்துதன தெண்ணியவெண்ணினுக்கேற்ப வெண்ணில்கோடித், தினத்தாலுஞ் செயற்கரிய செழுமணிமண்டபமீரேழ் திங்கட்செய்தான், றனத்தான்மிஞ்சிய தருமன்றம்பியர்க்குத் தண்டுடன் வெண்சங்குமீந்தான். |
(இ -ள்.) (மயன்), - மனத்தால்உம் - (தனது) மனத்தின் கற்பனாசக்தியினாலும், திரு தகு நூல் வரம்பால்உம்-மேன்மையமைந்த சிற்பசாஸ்திர பிரமாணத்தைக்கொண்டும், உரம் பயில்தோள் வலியினால்உம் - திண்மை மிகுந்த (தனது) கைகளின் திறமையினாலும், இனத்தால்உம்-(தனது) பரிவாரமாகவுள்ள சிற்பிவர்க்கத்தாரைக்கொண்டும், தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப - ஆலோசித்துத் தான் நிச்சயித்த மனோ நிச்சயத்திற்கு இயைய, எண் இல் கோடி தினத்தால்உம் செயற்கு அரிய செழு மணி மண்டபம் - அளவிறந்த கோடிக்கணக்கான நாள்களிலும் (பிறராற்) செய்து முடித்தற்கு அருமையான சிறந்த இரத்தின மண்டபத்தை, ஈர்ஏழ்திங்கள் செய்தான் - பதினான்கு மாதத்திற்செய்து முடித்தான்; (அதுவன்றி), தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு - செல்வத்தால்மிக்க தருமபுத்திரனுடைய தம்பியராகிய வீமசேனனுக்கும் அருச்சுனனுக்கும், தண்டுடன் வெள் சங்கும் ஈந்தான் - கதாயுதத்தையும் வெண்ணிறமான சங்கையும் முறையே கொடுத்தான்; (எ - று.) சத்துருகாதினியென்னும் பெயருள்ள கதாயுதமும், தேவதத்தமென்னும் பெயருள்ளதும் வருணனுடையதுமான பெரிய சிறந்த சங்கமும் விருஷபருவா என்ற அசுரராசனால் பகைவர்களைப் போரிலழித்தபின்பு பிந்துசரசில் வைக்கப்பட்டன வென்றும், அவற்றை மயன் அங்குள்ள இரத்தினப் பொதியை யெடுத்துக்கொண்டு வந்தபோது உடன் எடுத்துக்கொண்டு வந்து வீமார்ச்சுனர்க்குக் கொடுத்தன னென்றும் வியாசபாரதத்தினா லறிக. தோள் - கை. "தோளுற்றொர் தெய்வந் துணையாய்த் துயர் தீர்த்தவாறும்" என்ற |