பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 12

சிந்தாமணியிற் போல.  தினத்தால்-உருபுமயக்கம்.   தினத்தாலும் -
தினஞ்சென்றாலும் என்றபடி. ஈரேழ் - பண்புத்தொகை.  திங்கள் என்ற
சந்திரனதுபெயர், இலக்கணையாய் மாசத்தைக் குறித்தது.  அமாவாசைக்கு
அமாவாசை ஒருமாச மெனக்கொண்டு சந்திரசம் பந்தத்தால் மாசத்தை
வரையறுத்தல் சாந்திரமாநபக்ஷரீதி.  தருமத்தினின்று தவறினவர்கட்குத்
தக்கதண்டனைசெய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்கு 'தருமன்' என்று
பெயர்.  'தந்தையே மைந்தனாகிறான்' என்னும் நூல்வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை 'தருமன்' என்றது.  இனி ஒரு பெயரின் ஒருபகுப்பைக்
கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு வழக்கினால்,
தருமபுத்திரனென்ற பெயரைத் தருமனென்று குறித்ததாகவுங் கொள்ளலாம்.    
                                                          (7)

8. தருமபுத்திரன்அந்தமண்டபத்திற் பிரவேசஞ்செய்தல்.

அத்தபதி தன்குறிப்பாலமைத்தபெரு மண்டபத்தி னளவு நீளம்,
வித்தரமோடுயர்ச்சியெனும் வனப்பனைத்துங் கண்டோர்கள்
                                      வியந்துகூறக்,
கொத்தலர் தார்மணிமுரசக் கொடியுயர்த்தோன்
                            கனற்பிறந்தகொடியுந்தானு,
மெத்தமருமனமகிழக் குடிபுகுந்தானிறைஞ்சலருக் கிடியே
                                        றன்னான்.

     (இ -ள்.)  அ தபதி-(மயனென்கிற) அந்த அசுரசிற்பி, தன் குறிப்பால்-
தனது மனச்சங்கற்பத்தினால், அமைத்த - நிருமித்த, பெருமண்டபத்தின் -
பெரிய அந்த மண்டபத்தினது, நீளம் வித்தரமோடு உயர்ச்சி எனும் அளவு
வனப்பு அனைத்தும் - நீளமும் அகலமும் உயரமும் என்று சொல்லப்படுகிற
அளவுகளின் வரையறையும் அழகும் ஆகிய எல்லாவற்றையும், கண்டோர்கள்
வியந்து கூற - பார்த்தவர்களெல்லாரும் அதிசயித்துச்சொல்ல, இறைஞ்சலருக்கு
இடி ஏறு அன்னான் - பகைவர்கட்குப் பேரிடிபோன்றவனான, கொத்து அலர்
தார் மணி முரசம்கொடி உயர்த்தோன்-பூங்கொத்து மலரப்பெற்ற மாலையைத்
தரித்தவனும் அழகிய முரசவாத்தியத்தின் வடிவத்தை யெழுதிய துவசத்தை
உயரநிறுத்தியவனுமாகிய தருமபுத்திரன், கனல் பிறந்த கொடிஉம் தான்உம்-
யாகாக்கினியில் தோன்றிய பூங்கொடிபோன்ற திரௌபதியும் தானுமாக, எ தமர்
உம் மனம் மகிழ குடிபுகுந்தான்-எல்லாச் சுற்றத்தார்களும் மன மகிழ
(அம்மண்டபத்திற்) பிரவேசஞ் செய்தான்; (எ - று.)

    அம்மண்டபத்தின் நீளம் அகலம் உயரம் என்ற அளவுகளின் அமைப்பும்
விசித்திரவேலைப்பாடும் காண்பவரெல்லாம் ஆச்சரியப்பட்டுப் புகழ்ந்து
பேசும்படி யிருந்தன வென்க.  தருமன் தனது வெற்றிக்கு அறிகுறியாக
முரசவடிவத்தைக் கொடியிற்கொண்டனனென்க.  இறைஞ்சலருக்கிடியேறன்னான்
- பகைவர்கட்கு அச்சத்தையும் அழிவையும் விளைப்பவ னென்றபடி.
பகைவர்களாகிய சர்ப்பங்கட்கு இடியேறு போன்றவனென ஏகதேசவுருவகமாக