திருத்துழாய் மாலையையணிந்த திருமுடியையுடையவனான கண்ணபிரானும், தான்உம் - தானுமாக, ஏனை அம் புவி மன்னர்உம் முனிவர் அனைவர்உம் சூழ்தர இருந்த - அழகிய நிலவுலகத்தையாளுகிற மற்றை(ப் பற்பலதேசத்து) அரசர்களும் முனிவர்களும் ஆகிய எல்லாரும் தன்னைச்சூழ்ந்திருக்க(த் தான் அவர்கட்கெல்லாம் நடுவில் அச்சபாமண்டபத்திலே) வீற்றிருந்த, அமயம்தன்னில் - சமயத்திலே, - தும்புரு நாரதர் என்னும் இருவரின்உம் நாரதன் ஆம் தோன்றல் தோன்ற - (சங்கீதஸாஹித்யங்களிற் பேர் பெற்றவர்களான) தும்புரு நாரதன் என்ற தேவவிருடியரிருவருள்ளும் நாரதனாகிய பெருமையிற்சிறந்த முனிவன் அங்கு எழுந்தருள, (அத்தருமபுத்திரன் தான்), 'எதிர் போய் பணிந்து இறைஞ்சி பைம் பொன் மலர் தூய் என் செய்தான்-எதிர்கொண்டு சென்று வரவேற்று நமஸ்கரித்துத் துதித்துப் பசியபொன்மயமான மலர்களைவிட்டு அருச்சித்து (மற்றும்) எவ்வளவு உபசாரஞ் செய்தான்? [மிக்க உபசாரங்களைச் செய்தன னென்றபடி]; (எ - று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.
தம்பி-தாம் - பகுதி, பி-முறைப்பெயர்விகுதி: தமக்கு முன்பு பிறந்தவனென்ற பொருளில் 'தம்முன்' என்று வழங்குதல்போலத் தமக்குப்பின்பு பிறந்தவனென்ற பொருளைத் தரக்கூடிய 'தம்பின்' என்ற பெயர் தம்பியெனச் சிதைந்து வழங்கிய தென்பர் ஒருசாரார். இதன்மேல், அர் - பலர்பால்விகுதி, கள் - விகுதிமேல்விகுதி. புவி - வடசொல்; இது அந்தப்பாஷையில் ஏழாம் வேற்றுமை விரியாயினும் தமிழில் பெயர்மாத்திரமாய் வழங்கும். சூழ்தர - சூழ; தா - துணைவினை. தும்புருநாரதர் - பன்மைவிகுதிபெற்ற உயர்திணையும்மைத்தொகை. நாரதன் என்ற வடமொழிப்பெயர் - ஆத்மஞானத்தை உபதேசிப்பவனென்றும், மனிதர்கட்கு உள்ள ஒற்றுமையை (த்தான் செய்யுங்கலகத்தினாற்) கெடுப்பவ னென்றும் காரணப்பொருள்படும். நரன் - ஆத்மா; அதற்கு உரிய ஞானம் - நாரம்; தா - கொடுத்தல்: அன்றி, நரர் - மனிதர்; அவர்சமூகம் அல்லது அவர்சம்பந்தமான ஒற்றுமை - நாரம்; த - கெடுத்தல். தோன்றல் - அனைவரினுஞ்சிறந்து தோன்றுபவன்; அல் - கருத்தாப்பொருள்விகுதி, உயர்திணையாண்பாற் சிறப்புப்பெயர். பசுமை + பொன் = பைம்பொன்; "ஈறுபோதல்" என்னுஞ் சூத்திர விதி. தூய், தூ - பகுதி; இதுவே உகரம் பெற்று 'தூவு என்று வழங்குவது: ய் - இறந்தகால வினையெச்சவிகுதி. மைந்து - இளமை; அதனையுடையவன், மைந்தன். தும்புருநாரதரென்னு மிருவரும் இசைக்கிழமையுடைய தேவவிருடிக ளாதலாலும், அவ்விருவருள்ளும் நாரதன் பிரசித்திபெற்றுச் சிறத்தலாலும் 'தும்புருநாரதரென்னுமிருவரினும் நாரதனாம் தோன்றல்' என்றார்; தோன்றல் - பெரியவன். பொன்மலர் - பொன்போ லருமையான மலர் எனினுமாம். 'அமயந்தன்னில்' என்றவிடத்து 'அவையந்தன்னில்' என்றும்பாட முண்டு; சபையி லென்பது பொருள். இரண்டு பாடத்திலும், தன்-சாரியை. பிந்தின பாடத்துக்கு 'அம்' என்பதும் சாரியையாம். முடி - மயிர்முடி. (9) |