பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 145

 130.-சேனைகளோடும்சுற்றத்தாரோடும் கூடிய கண்ணனும்
சிசுபாலனும் போர்செய்தல். 

ஆதிவரு கதிர்ப்பரியு மணிவயிரத்திண்டேரு மனில மென்ன
மோதிவரு கடகளிறுங் காலாளும்பொறாதுரகர் முடிகள் சோர
யாதவனா நரபதியு மிருங்கிளையும்பெருங்கிளையோ டெதிரி லாத
சேதிகுல நரபதியுஞ் செய்தவமர்சுராசுரரிற் செய்த ருண்டோ.

    (இ - ள்.) ஆதி வரு கதி பரிஉம் - மண்டலமா யோடிவருகிற நடையில்
வல்ல குதிரைகளும், அணி வயிரம் திண் தேர்உம் - அழகிய மரத்தாலாகிய
வலிய தேர்களும், அனிலம் என்ன மோதி வரு கட களிறுஉம் - காற்றுப்போல
(மிக்கவிசையும் மிக்க வலிமையுங் கொண்டு) தாக்கிவருகிற மதயானைகளும்,
காலாள்உம் - பதாதிகளும் (ஆகிய சதுரங்கசேனைகளின் மிகுதியாலாகிய
அதிகபாரத்தை), பொறாது - தாங்கமாட்டாமல், உரகர் முடிகள் சோர -
(கீழிருந்து பூமியைத் தாங்குகிற) நாகஜாதியார் தலைகள் சாய, யாதவன் ஆம்
நரபதிஉம் இருங்கிளைஉம் - யதுகுலத்தில் தோன்றிய கிருஷ்ணனாகிய
அரசனும் அவனுடன் நின்ற அவனது மிக்க சுற்றத்தவர்களும், பெருங்
கிளையோடு எதிர் இலாத சேதி குல நரபதிஉம் - மிக்க சுற்றத்தவருடன்
கூடிநின்ற ஒப்பற்ற சேதிநாட்டரசர் குலத்தவனான சிசுபாலனும், செய்த -
(ஒருவரோடொருவர்) செய்த, அமர் - யுத்தம் போன்ற யுத்தத்தை, சுர
அசுரரில் செய்தார் உண்டோ - தேவாசுரர்களிலுஞ் செய்தவருண்டோ?
[இல்லை யென்றபடி] (எ. று.)

    தேவாசுரயுத்தத்தினுங் கொடிய யுத்தத்தைச் செய்யலாயின ரென்பதாம்.
வேள்விக்கு வரும்போதே இருவரும் தம்தம் சேனைகளுடன்
வந்திருந்தனரென்றும், அவரவரது அன்புடைச் சுற்றத்தார் அவரவர்க்குப்போர்
துணையாயின ரென்றும் அறிக.  ஆதி - மண்டலமாயோடுதல்; இது
குதிரையின் கதிவகைகளிலொன்று; வலசாரி, இடசாரி முதலிய
கதிவிகற்பங்கட்கும் இது உபலக்ஷணம்.  இனி, ஆதி - நெடுஞ்செலவு என்றனர்
நச்சினார்க்கினியர் (கலித்.96: வரி 20; மதுரைக்காஞ்சி. வரி.390): அதாவது,
குதிரையின் நேரோட்டம்.  வயிரத்தேர் - வச்சிரரத்தினம் பதித்த தேருமாம்.
காலாள் - யானை தேர் குதிரையென்னும் வாகனமின்றிக் கால்களினால்
நடந்துசெல்லும் வீரர்.  உரகர் என்ற வடசொல் - (கால்களில்லாமையால்)
மார்பினாலூர்ந்து செல்பவரென்று காரணப் பொருள்படும்: உரஸ் - மார்பு.
இங்கு, உரகர் - சர்ப்பராஜனான ஆதிசேஷனும், வாசுகி முதலிய அஷ்டமகா
நாகங்களும்; வாசுகி முதலியோர் கிழக்கு முதல் எண்திசையிலும் இருந்து
பூமியைத் தாங்க ஆதிசேஷன் நடுவில் நின்று தாங்குகின்றனன் என்ப.  கிளை
- மரத்துக்கிளைப்போல் ஒருவரைத்தழுவி நிற்கும் உறவினர்க்கு
உவமையாகுபெயர்.                                          (130)