பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 149

தாக்கித் திக்கஜங்களையும் தேவர்களையும் செவிடாக்கிவிட்டது என
அம்முழக்கத்தின் மிகுதியை வருணித்தவாறாம்.  வெருவரும்படி - வெருவு
என்ற வினைப்பகுதியும் வாஎன்ற துணைவினையும் சேர்ந்து விகாரப்பட்டு
'வெருவா' என நின்றது.  கம்பு, விதம், மத்தவாரணகர்ணம்-வடசொற்கள்.
'ஊழியெறிந்தகால்' என்றும் பாடமுண்டு.  'கம்புகொம்பு விதங்கள்' என்ற
பாடத்துக்கு - சங்குகளின் வகைகளும் ஊதுகொம்புகளின் வகைகளும் என்று
பொருள் காண்க.                                    (134)

135.-சுற்றத்தார்கள்போர்செய்ய கிருஷ்ணசிசுபாலரும்
பொருதல்.

புடைபடக்கிளையாகிவந்தெதிர்பூதுரந்தரர்யாவருந்
தொடைபடப்பரிவுறுமனத்தொடுதொந்தயுத்தமுடற்றினார்
குடையெடுத்தனரிருவரும்பெறுகொடியெடுத்தனர்கொற்றவெம்
படையெடுத்தனர்மாமறைப்பசுபாலனுஞ்சிசுபாலனும்.

     (இ -ள்.) புடைபட - பக்கங்களிலே பொருந்த, கிளை ஆகி வந்து -
(இருவர்க்கும்) சுற்றமாய்வந்து, எதிர் - எதிர்த்த, பூதுரந்தரர் யாவர்உம்-பூமியை
ஆளுகிற பாரத்தை வகிப்பவரான அரசர்களெல்லாரும், தொடை பட -
தொடர்ச்சியாக, பரிவு உறு மனத்தொடு - (தம்தம் தலைவரிடம்) பற்றுமிக்க
மனத்துடனே, தொந்தயுத்தம் உடற்றினார் - இவ்விருவராக ஒருவரோடொருவர்
போர்செய்து பகையழித்தார்கள்;  (அங்ஙனமாக), குடை எடுத்தனர் -
ஒற்றைவெண் கொற்றக்குடையை உயரத்தரித்துள்ளவர்களும், பெறுகொடி
எடுத்தனர் - (வெற்றிக்கு அறிகுறியாகப்) பெற்ற துவசத்தை
உயரநாட்டியுள்ளவர்களுமான, மா மறை பசுபாலன்உம் சிசுபாலன்உம்
இருவர்உம் - மகிமையுள்ளவேதங்கட்குத் தலைவனான கோபாலனாகிய
ஸ்ரீகிருஷ்ணனும் சிசுபாலனும்  ஆகிய இருவர்களும், கொற்றம் வெம்படை
எடுத்தனர் - வெற்றியையுடைய கொடிய ஆயுதங்களை (ப் போர்
செய்தற்பொருட்டு)க் கைகளிலெடுத்துக் கொண்டார்கள்; (எ - று.)

     'புடைபட' என்பதற்கு - பெருந்தொகுதியாக என்றும், 'தொடைபட'
என்பதற்கு - அம்புகள் (எதிரிகளின்மீது) படஎன்றும், 'பரிவுறுமனத்தொடு'
என்பதற்கு - (தாம் மகாவீரராதலாற் போரில்) ஆசைமிக்க மனத்தோடு என்றும்
பொருள் கொள்ளலாம்.  பரிவு - கவலையுமாம்.  கிளை - படைத்துணை.  பூ
துரந்தரர், த்வந்த்வயுத்தம், பசுபாலன், சிசுபாலன்-வடசொற்கள்.  மாமறைப்
பசுபாலன் - சிறந்த பிரமாணமான வேதங்களை வெளியிட்டவனும்
அவ்வேதங்களினாற் கொண்டாடப்படுபவனுமான கோவிந்தன்.  'பசுபாலன்'
என்ற பெயர்-பசுக்களைக் காப்பவனென்றும் உயிர்களைக் காப்பவனென்றும்
பொருள்படும்.  'பசுபாலனும் சிசுபாலனும்' என்றவிடத்துப் பிராசமென்னுஞ்
சொல்லணி காண்க.                                           (135)