பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 15

10.- தருமபுத்திரன்நாரதமாமுனிவனுக்குச்
செய்யும் உபசாரம்.

ஏற்றினா னாசனத்திற் றனித்தனியேயுபசாரம் யாவுந் தந்து,
மாற்றினான் வழியிளைப்பு மலரயன்போ லிருந்தோனை மகிழ்ச்சி
                                           கூர்ந்து,
போற்றினா னீவரயான் புரிதவம்யாதெனப் புகழ்ந்தான்
                                   பொதியிற்றென்றற்,
காற்றினா லரும்புநறுஞ் சூதம்போற் புளகரும்புங்காயத்தானே.

     (இ -ள்.) பொதியில்-பொதியமலையிலிருந்து வருகிற, தென்றல் காற்றினால்
- தென்றற்காற்றினாலே, அரும்பும் - தளிர்த்துப் பூக்கின்ற, நறுஞ்சூதம் போல்
- வாசனை வீசுகின்ற மாமரம்போல, புளகு அரும்பும் - (நாரதமுனிவரது
வரவுபற்றிய மகிழ்ச்சியினால்) மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்ற, காயத்தான் -
உடம்பையுடையவனாகிய தருமபுத்திரன், - மலர் அயன்போல் இருந்தோனை -
(திருமாலின் திருநாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமன்போலச்
சிறப்புற்றிருந்தவனான நாரதமகா முனிவனை, ஆசனத்தில் ஏற்றினான் -
(சிறந்ததோர்) ஆசனத்திலிருத்தி, உபசாரம் யாவும் தனித்தனியே தந்து-
(அருக்கியம் பாத்தியம் முதலிய) உபசாரங்களையெல்லாம் தனித்தனி [விடாமல்
ஒன்றன்பின்ஒன்றாகச்] சமர்ப்பித்து, வழி இளைப்பு மாற்றினான்-
(அம்முனிவனது) வழிவரவினாலாகிய தளர்ச்சியைத் தீர்த்து, மகிழ்ச்சி கூர்ந்து
போற்றினான் - ஆனந்தம்மேலிட்டுத் துதித்து, நீ வர யான் புரி தவம் யாது
எனப்புகழ்ந்தான்-'நீ இங்கு எழுந்தருளுதற்கு யான்செய்துவைத்த தவம்
யாதோ!' என்று புகழ்ந்து உபசாரவார்த்தை கூறினான்;  (எ - று.)

     தவிசு அளித்தல் [ஆஸநம்], கையில்நீர்தரல் [அர்க்யம்], கால் கழுவ
நீர்தரல் [பாத்யம்], முக்குடிநீர்தரல் [ஆசமநீயம்], நீராட்டல் [ஸ்நாநம்], ஆடை
சாத்தல் [வஸ்திரம்], முப்புரிநூல் தரல் [உபவீதம்], தேய்வை பூசல் [கந்தம்],
மலர்சாத்தல் [புஷ்பம்], மஞ்சளரிசிதூவல் [அக்ஷதை], நறும்புகை காட்டல்
[தூபம்], விளக்கிடல் [தீபம்], கருப்பூரம் ஏற்றல் [கர்ப்பூரம்], அமுதமேந்தல்
[போஜநம்], அடைக்காய்தரல் [தாம்பூலம்], மந்திரமலரான் அருச்சித்தல்
[மந்த்ரபுஷ்பம்] என்ற பதினாறும், ஷோடசோபசார மெனப்படும்.

     பூக்களுள் தாமரை சிறத்தலால், அது, அடைமொழி கொடாமல் வாளா
'மலர்' எனப்பட்டது.  அஜன்-அ - திருமாலினிடத்தினின்று, ஜன் -
தோன்றினவன்.  'தந்தையே மைந்தனாகிறான்' என்னும் நூல்வழக்குக்கு ஏற்ப,
பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனான நாரதனுக்கு அப்பிரமனை
உவமை கூறியது, ஏற்கும்;  தத்துவஞானத்திலும் தவப்பெருமையிலும்
பிரமன்போலச் சிறந்தவன் நாரதனென்க.  முனிவன்வரவினாலாகிய
மகிழ்ச்சியால் தருமனுடல் மயிர் சிலிர்த்ததற்கு, தென்றற்காற்றின் வரவினால்
மாமரம் தளிர்த்தல் உவமை கூறப்பட்டது:- "நல்லோர்வரவால்
நகைமுகங்கொண்டின்புறீஇ, அல்லோர்வரவா னழுங்குவார் - வல்லோர்,
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா, வருந்துஞ் சுழல்