பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 150

136.-இருவரும் செய்தபோர்த்திறம்.

வேலி னால்வடி வாளி னால்வரிவில்லி னாலுரை பெற்றவெங்
கோலி னாலிரு வருமு னைந்திருகுன்ற மொத்தன தேரினார்
மாலி னால்வரு மத்த யானைகண்மலைவ தொத்தும தித்தபோர்
நூலி னால்வழு வறம லைந்தனர்நுண்மை யாவினுநுண்ணியார்.

     (இ -ள்.) நுண்மை யாவின்உம் நுண்ணியார் இருவர்உம் - நுண்ணிய
பொருள்க ளெல்லாவற்றினும் நுண்ணிய தமது அறிவு நுட்பத்தை
யுடையவர்களான கண்ணனும் சிசுபாலனுமாகிய இருவரும்,-இரு குன்றம் ஒத்தன
தேரினார் - இரண்டு மலைகளைப் போன்றனவான தேர்களின்
மேலிருந்தவர்களாய்,- வேலினால் - வேலாயுதத்தைக் கொண்டும்,
வடிவாளினால் - கூரிய வாளாயுதத்தைக்கொண்டும், வரி வில்லினால்
உரைபெற்றவெம் கோலினால் - கட்டமைந்த வில்லினா லெய்யப்படுகிற
புகழ்பெற்ற கொடிய அம்புகளைக்கொண்டும், மாலினால் வரு மத்த யானைகள்
மலைவது ஒத்து - மயக்கத்துடனே வருகிற மதங்கொண்ட யானைகளிரண்டு
தம்மிற் போர் செய்வது போன்று, மதித்த போர் நூலினால் வழுஅற - நன்கு
மதிக்கப்பட்ட யுத்த சாஸ்திரமுறைப்படி தவறாமல், முனைந்து மலைந்தனர் -
ஊக்கங்கொண்டு போர்செய்தார்கள்;

    நுண்மையாவினும் நுண்ணியார் - நுண்ணிய பொருள்களனைத்தையும்
நுட்பமாக உணரும் அதிசூக்ஷ்மபுத்தியுடையோர்.  நுண்மை-பண்பாகுபெயராய்,
நுண்ணியபொருளின்மேல் நின்றது.  'நுண்ணியார்' என்றவிடத்து, அறிவினது
நுண்மை அதனையுடையார்மே லேற்றிக் கூறப்பட்டது, வடிவாள் -
வடிக்கப்பட்ட வாள்;  வடித்தல் - நெருப்பிற் காய்ச்சியடித்துக் கூராக்குதல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட வாள் எனினுமாம்.  தேர்க்குக் குன்றம் - வலிமை பருமை
உயர்வுகளில் உவமம்.  தேரினார் - குறிப்பு முற்றெச்சம்.  'குன்றமொத்துயர்
தேரினார்' என்பதும் பாடம்.  'மாலினால்' என்றதில் 'ஆல்' என்ற மூன்றனுருபு
அடைமொழிப்பொருளது.  உரை பெற்ற - சிறந்ததென்று கொண்டாடப்பெற்ற.
                                                         (136)

வேறு.

137.-இருவரும் சிலநேரம்சமமாகப் பொருதபின்பு, கண்ணன்
சிசுபாலன்மேல் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்தல்.

வெஞ்சின முடுக வொருவருக்கொருவர் வெல்லலுந்
                                     தோற்றலுமின்றி,
வஞ்சின முரைசெய் துள்ளமு மெய்யும் வாகுபூதரங்களும் பூரித்,
தெஞ்சினர் தமைப்போ லிளைத்தபி னினிவானேற்றுதல் 
                                    கடனெனக் கருதிக்,
கஞ்சனை முனிந்தோ னிவன்முடித்தலைமேற்கதிர்மணித்
                                     திகிரியே வினனே.

     (இ-ள்.) வெம் சினம் முடுக - கடுங்கோபம் மேல்மேல் மூள,
ஒருவருக்கு ஒருவர் வெல்லல்உம் தோற்றல்உம் இன்றி-ஒருவரை