மைத்துனன் முடியை விளங்கு கோளகி உறவீசி - நெருங்கிய பகைவனான மைத்துன முறைமையுடைய சிசுபாலனது தலையை(த் துணித்து விளங்குகிற) அண்டகோளத்தின் முகட்டைப் பொருந்தும்படி வீசியெறிந்து விட்டு,-ஆவிகள் அனைத்தும் நிறைந்து - உயிர்களிலெல்லாம் வியாபித்து, ஒளிசிறந்த - ஒளிமிக்க விளங்குகின்ற, அச்சுதன் - அச்சுதனென்னுந் திருநாம முடையவனும், அலைகொள் பாற்கடலில் தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் - அலைகளைக்கொண்ட திருப்பாற்கடலில் தோன்றிய இனிமையான அமிருதத்தைத் தேவர்கட்குக் கொடுத்தருளியவனுமான அக் கண்ணபிரானது, திரு கரம் - சிறந்த வலத்திருக்கையில், சென்று சேர்ந்தது - போய்ச் சேர்ந்துவிட்டது; (எ - று.) வீரசுவர்க்கஞ்செல்வார் இடையிலுள்ள சூரியமண்டலத்தைப் பிளந்து கொண்டு அதன் வழியாய் மேற்செல்லவேண்டுதலால், 'வீரரைத் துறக்கமேற விட்டிடுமிரவி' எனப்பட்டது. ஒளிமிகுதியினாலும், வட்டவடிவினாலுமேயன்றி, வீரனான சிசுபாலனது உயிரைப் பரமபதமேறச் செலுத்துதலினாலும், சக்கரத்துக்கு வீரருயிரைத் துறக்கமேற விட்டிடும் இரவி உவமையாகும். தேவர்கள் பக்கல் பக்ஷபாதமுடையவனாதலால் அசுராம்சமுள்ள சிசுபாலனை அழித்தனனென்பது ஈற்றடியில் தொனிக்கும், மைத்துனன் - இங்கே அத்தை மகன். அச்யுதன் என்ற வடமொழிப்பெயர் - அழிவில்லாதவனென்றும், சரணமடைந்தவர்களைக் கைவிடாதவனென்றும் பொருள்படும். தீவிய - தீம் என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். 'திவ்ய' என்றவடமொழி விகாரப் பட்டதெனக் கொள்ளுதலு மொன்று, சேர்ந்ததுவே-சிறுபான்மை குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது பொதுவிதியால் வகரவுடம்படுமெய்பெற்றது. (138) 139.-சிசுபாலனுயிர்கண்ணபிரானது திருவடியிற் சேர்தல். சேதிமன்னவன்றன்முடியினைநெடியோன்றிகிரிசென்றரிந்திட வொருபொற், சோதிமற்றவன்றனுடலினின்றெழுந்துசுடரையும் பிளந்துபோய் மீண்டு, மாதிரமனைத்துமொளியுறவிளக்கிமண்ணளந்தருள்பதமடைய, வேதியர்முதலோர்யாவரும் வேள்விப்பேரவை வேந்தருங்கண்டார். |
(இ -ள்.) சேதி மன்னவன்தன் முடியினை - சேதிதேசத்தரசனான சிசுபாலனது தலையை, நெடியோன் திகிரி சென்று அரிந்திட - கண்ணபிரானது சக்ராயுதம் போய் அறுத்தவுடன், ஒரு பொன் சோதி - பொன்மயமான ஓர் ஒளியானது, அவன்தன் உடலினின்று எழுந்து - அந்தச்சிசுபாலனது உடம்பினின்று எழுந்து, சுடரைஉம் பிளந்து போய்-சூரிய மண்டலத்தையும் பிளந்துகொண்டு ஊடுருவிச்சென்று, மீண்டு - திரும்பி, மாதிரம் அனைத்துஉம் ஒளி உற விளக்கி - திக்குகளையெல்லாம் சோதிமயமாகப் பிரகாசிப்பித்துக்கொண்டு, மண் அளந்தருள் பதம் அடைய - (முன்பு திரிவிக்கிரமாவதார காலத்தில்) உலகத்தை |