யளந்தருளிய கண்ணபிரானது திருவடியிற் சேர, (அவ்வுயிர் பரமாத்மாவினிடம் சாயுச்சியமடைந்ததை), பொ வேள்வி அவை வேந்தர்உம் வேதியர் முதலோர் யாவர்உம் கண்டார் - பெரிய அந்தயாக சபையிற் கூடியிருந்த அரசர்களும் அந்தணர்கள் முதலானவர்களெல்லாரும் பார்த்தார்கள்; ( எ - று.)- மற்று - அசை. எம்பெருமானது திருவடியே வீடாயிருக்குமென்ற கோட்பாடு, இங்கு விளங்குகின்றது. "தேரார்நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு" "வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய்", "இருளகற்று மெரிகதிரோன் மண்டலத்தூ டேற்றிவைத்து" என்ற அருளிச்செயல்களாலும், பரமபதஞ் சேர்வார் சூரியமண்டலத்தினூடே போதலுணர்க. சுடர்-ஒளி; முச்சுடரில் சந்திர அக்கினியராகிய மற்றை யிருசுடர்க்கும் ஒளியைக்கொடுத்து வாங்கும் ஆயிரங்கிரணங்களையுடைய சிறப்புப்பற்றிச் சூரியன் 'சுடர்' எனப்பட்டான். மகாபலிசக்கரவர்த்தியைச் செருக்கடக்குமாறு திருமால் உலகமளந்தது, அரசிழந்து வருந்திய தேவர்களைப் பாதுகாத்தருளுதற்பொருட்டாதலாலும், உலக மளந்து கொள்ளுகிற வியாஜத்தால் எம்பெருமான் எல்லாப்பிராணிகளின் முடியிலும் தனது அடியைவைத்து அனைத்துயிரையும் ஆட்கொண்டருளியதனாலும், 'மண்ணளந்தருள்பதம்' எனப்பட்டது. அன்றியும், உயர்ந்தவர் செயல்களைக் குறிக்கும் வினைச்சொற்களோடெல்லாம் 'அருள்' என்பது துணைவினையாய் நின்று மேன்மைப்பொருள் குறிக்கும்; படைத்தருள், காத்தருள், அழித்தருள் முதலியன காண்க. நெடியோன்-ஸ்ரீமகாவிஷ்ணு. (139) 140.-அதுகண்ட அனைவரும்கொண்டாடி மகிழ்தல். ஈதொருபுதுமையிருந்தவாவென்பாரிந்திரசாலமோவென்பார் மாதொருபாகனல்லதிக்கண்ணன்மதிகுலத்தவனலனென்பார், கோதொருவடிவாம்புன்மொழிகிளைஞர்கூறினும்பொறுப்பரோ வென்பார் காதொருகுழையோனிளவலைத்தேர்மேற்கண்டுதங்கண்ணினை களிப்பார். |
(இ -ள்.) (அதுகண்ட அரசர் முதலியோரெல்லாரும்), ஈது ஒரு புதுமை இருந்தஆ என்பார் - (இவனுடம்பினின்று ஒருசோதி தோன்றி யெழுந்து கண்ணனது பாதத்திற்சேர்ந்த) இஃது ஓர் அதிசயம் இருந்தவிதம் (என்னே!) என்று கொண்டாடிச்சொல்பவர்களும், இந்திரசாலம் ஓ என்பார் - (இது மெய்த்தோற்றமன்றிப் பொய்த்தோற்றமாகிய) இந்திரசாலவித்தையோ என்று சொல்பவர்களும், இ கண்ணன் மாது ஒரு பாகன் அல்லது மதிகுலத்தவன் அவன் என்பார்-இந்தக் கிருஷ்ணன் அர்த்தநாரீசுவரமூர்த்தியான சிவபிரானேயல்லாமற் (சாதாரணமனிதனான) சந்திரகுலத்தானொருவனல்லன் என்று சொல்பவர்களும், கோது ஒரு வடிவுஆம் புல் மொழிகிளைஞர் கூறின்உம் பொறுப்பர் ஓ என்பார்-குற்றந்தானே ஒரு வடிவமெடுத்தாற்போன்ற நிந்தனைச்சொல்லை |