வைகுண்டம் கோயில் மெய் உறு துவாரபாலகர் - பேரொளியைக் கொண்ட அந்த ஸ்ரீ வைகுண்டலோகத்திலுள்ள கோயிலின் வாயில்காவலாளரான உண்மைக் குணம்பொருந்திய ஜயவிஜயர்கள், அ வேதபண்டிதனை விலக்க - வேதங்களில் தேர்ந்தவனான அத்துருவாசமுனிவனைத் (திருக்கோயினுட் புகவொட்டாது) தடை செய்ய, (எ - று.)- 'விலக்கிய இருவர் தம்மையும் அந்த முனிவரர் சபித்தான்' என அடுத்த செய்யுளோடு குளகமாகத் தொடரும். 'ஐவகைவடிவு' என்றது - பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்ற திருமாலின் ஐவகை நிலைகளை. இவற்றில், பரத்வமாவது - பரமபதத்தி லெழுந்தருளி யிருக்கும் நிலை. வியூகமாவது - வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலி லெழுந்தருளி யிருக்கும் நிலை. விபவம்-ராமகிருஷ்ணாதி அவதாரங்கள். அந்தர்யாமித்வம்-சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்து வசித்தல்: அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும் இதில் அடங்கும். அர்ச்சை - விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல். ("வலனோங்கு பரமபத மாமணிமண்டபத்திலமர், நலனோங்கு பரம்பொருளாய் நான்குவியூகமுமானாய், உபயகிரிப்புய ராமனொடுகண்ணன் முதலான, விபவவுருவமுமெடுத்து வீறுமுயிர்தொறுங்குடிகொள், அந்தரியாமியுமான தமையாமே எளிதாக, இந்தநெடுவேங்கடத்திலெல்லோருந்தொழ நின்றோய்", "வடிவைந்தின்வாழுமிடம், வைகுந்தம் பாற்கடல் மாநீரயோத்தி வண்பூந்துவரை, வைகுந்த மன்பர்மனம் சீரரங்கம் வடமலையே" என்பவை இங்கு நோக்கத்தக்கன). செய்தவத்துத் துருவாச முனிவன் - தவஞ்செய்த துருவாசமுனிவன் என்க. "மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் வைகுந்தம்" என்றபடி பரமபதம் மிக்க சோதிமயமாய் விளங்குதலால், 'சுடர்கொள் வைகுண்டம்' எனப்பட்டது. செய்யொளி திகழும் பங்கயம் - செந்தாமரை. பங்கயக் கண்ணன் - புண்டரீகாக்ஷன். (142) 143. | விலங்கியவிருவர்தம்மையுமந்தவெஞ்சினமுனிவரன் வெகுண்டு, துலங்கியகோயிற்றுவாரம்விட்டவனிதோன்றுமின் போயெனச் சபித்தான், அலங்கலந்துளவமௌலியானதுகேட்டந்தணன்றனையெதிர் கொண்டு, கலங்கியதுவாரபாலர்நின்சாபங்கடப்ப தெக்காலமோவென்றான். |
(இ -ள்.) விலங்கிய இருவர் தம்மைஉம் - (அங்ஙனந்) தடுத்த அவ்வாயில் காவலாளரிருவரையும், அந்த வெம் சின முனிவரன் - கடுங்கோபமுள்ள ரிஷிச் சிரேஷ்டனான அந்தத் துருவாசமாமுனிவன், வெகுண்டு - கோபித்து, துலங்கிய கோயில் துவாரம் விட்டு போய் அவனி தோன்றுமின் என சபித்தான் - 'விளங்குகின்ற இத்திருக்கோயில்வாயிலை விட்டுப்போய் (நீங்கள்) பூமியிற் பிறக்கக்கடவீர்' என்று சாபமிட்டான்; அலங்கல் அம் துளவம் மௌலியான் - மாலையாகத் தொடுத்த அழகிய திருத்துழாயைச் சூடிய திருமுடியை யுடையவனான திருமால், அது கேட்டு- அச்சாப |