தோறும் விரைவில் அத்திருமால்கையாலழிந்து வீடு பெறலாமென்பது அவர்களுட்கோள். வான்பிறப்பு - சிறந்த பிறப்பு எனினுமாம்; அப்பிறப்புக்குச் சிறப்பு-திருமாலுக்கு அன்பராதல். விமலன் என்ற வடமொழித் திருநாமம் - தான் இயல்பிலே கருமத்தொடர்பில்லாதவன் என்ற பொருளோடு, தனக்குச்சரீரமாகிய ஜீவாத்மாக்களின் கருமமும் தன்னிடம் தொடரப்பெறாதவனென்னும் பொருளையும் கொண்டது. 'வான்பிறப்பு' என்ற விடத்து, வன்பிறப்பு என்று சிலபிரதிகளிற் காணப்படுகிறது. கொடியவெம் - ஒருபொருட்பன்மொழி. (145) 146. | இரணியனிரணியாக்கனென்றுரைக்குமியற்பெயரிருவருமெய்தி, முரணியகொடுமைபுரிந்துமூவுலகுமொய்ம்புடன்கவர்ந்திடு நாளின், அரணியினழல்போனரவரியுருவாயச்சுதன்றூணிலங்குரித்துத், தரணியினுகிராற்பிளந்துமுன்னுகத்திற்றன்பகைசெகுத்தனன் பின்னும். |
(இ -ள்.) இருவரும் - அந்தத் துவாரபாலகரிரண்டுபேரும், முன்உகத்தில் - முதல் யுகமான கிருதயுகத்திலே, இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயல் பெயர் எய்தி - இரணியனென்றும் இரணியாக்ஷனென்றும் சொல்லப்படுகிற இயற்பெயரைப்பெற்று, முரணிய கொடுமை புரிந்து - (நீதிக்கு) மாறுபட்ட கொடுந்தொழில்களைச் செய்து, மூ உலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் - மூன்று உலகங்களையும் வலியத் தம்வசப்படுத்தியிருந்த காலத்தில், அச்சுதன்-திருமால். அரணியின் அழல்போல் - தீக்கடைகோலினின்று தீ (எழுவது)போல, நர அரி உரு ஆய் தூணில் அங்குரித்து - நரசிங்கரூபமாய்த் தூணிலிருந்து அவதரித்து, தன் பகை - தன்னிடத்துப் பகைமை பாராட்டிய இரணியனை, தரணியின் உகிரால் பிளந்து - சூரியன்போல் விளங்குகிற (தன்) கைந்நகத்தினால் (மார்பைப்) பிளந்து, செகுத்தனன் - அழித்தருளினான்; பின்னும் - பின்பும் [திரேதாயுகத்திலும்], (எ - று.)- 'அரக்கர்குலத்துக் கதிபதியாகி ஆண்டுபோய் மீண்டுமங்குரித்து' என அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும். நரசிங்கமூர்த்தியாய் இரணியனைக் கொன்றதை எடுத்துக்கூறினது, வராகமூர்த்தியாய் இரணியாக்ஷனைக் கொன்றதற்கும் உபலக்ஷணம். அரணி- கடைந்து தீயையுண்டாக்குதற்கு இடமான மரத்துண்டு; அதில் வேறொரு மரத்துண்டுகொண்டு கடைந்த விடத்து நெருப்பு உண்டாதலியல்பு. யாகத்துக்கு உரிய அந்த வைதிக அக்கினியை இங்கு உவமை கூறியது, உலகத்துப் பிராணிகள்போல ஒரு தாயின் கர்ப்பத்திலே சிலகாலமிருந்து பிறவாமல் விரைவாகத் தூணினின்று உதித்து விளங்கியதையும் தூய்மையையும் காட்டுதற்கு. தரணி என்ற வடசொல்-சூரியனது பரியாயநாமங்களிலொன்று; (இருளைக்) கடத்தற்குக் கருவியானவனென்றாவது, (வானத்தைக்) கடக்கின்றவனென்றாவது இதற்குக் காரணப்பொருள் காண்க. இனி, 'தரணியின் உகிராற்பிளந்து' என்பதற்கு - பூமியிலே நகத்தினாற்பிளந்து என்று உரைத்தல் பொருந்தாது; "மண்ணிற்சாகிலன் வானிலுஞ்சாகிலன்...........வரத் |