கால் வர" என்ற செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. தென்றல் - தென்திசைக்காற்று, தெற்கிலிருந்து வருவது எனப் பொருள்படும். தென்றல்- தெற்கு என்பது ஈறுகெட்டு றகரம் னகரமாகத் திரிந்தது; து - சாரியை; அல் - பெயர்விகுதி: சாரியையின் உகரங்கெட்டுத் தகரம்றகரமானது - சந்தி. பொது + இல் = பொதுவில்; என்பது பொதியில் என உகரம் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது; மரூஉ முடிபு. (10) 11. - தருமபுத்திரன் நாரதனைநோக்கிக்கூறிய உபசாரமொழி. யான்புரிந்த தவமுலகில்யார்புரிந்தா ரவனிபரி லிசையின் வீணைத், தேன்புரிந்த தெள்ளமுதா லமுதுண்டோர் செவியிரதந் தெவிட்டு விப்பாய், மான்புரிந்த திருக்கரத்து மதியிருந்த நதிவேணிமங்கை பாகன், றான்புரிந்த திருக்கூத்துக் கிசையமகிழ்ந்திசைபாடுந்தத்வஞானி. |
(இ -ள்.) வீணை இசையின் - யாழிசையாகிய, தேன் புரிந்த தெள் அமுதால் - தேனோடுகலந்த தெளிவான அமிருதத்தினால், அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - (திருப்பாற்கடலினின்று தோன்றிய) அமிருதத்தைப் பானஞ்செய்தவர்களான தேவர்களுடைய காதுகளில் அந்த அமிருதத்தினும் மிக்கசுவையை மிகநிறைக்கின்ற சங்கீத பண்டிதனே! மான் புரிந்த திருக்கரத்து - மான் தங்கிய அழகிய கையையும், மதி இருந்த நதி வேணி - சந்திரன் தங்கியதும் கங்காநதியைத் தரித்ததுமான சடையையுமுடைய, மங்கை பாகன் - என்றும் மாறாத இளமையையுடையளான அம்பிகையை (வாம) பாகத்திற்கொண்டவனாகிய சிவபெருமான், தான் புரிந்த - தான் செய்தருளுகின்ற, திருக்கூத்துக்கு - திருநடனத்துக்கு, இசைய - இணங்க, மகிழ்ந்து இசை பாடும் - ஆனந்தங்கொண்டு தேவகானம் பாடுகிற, தத்வஞானி - தத்துவஞானத்தையுடையவனே! (இப்படிப்பட்ட மகாமுனிவனான நீ என்பக்கல் எழுந்தருளப்பெற்றே னாதலால்), யான் புரிந்த தவம் உலகில் அவனிபரில் யார் புரிந்தார் - யான் செய்த அவ்வளவு பெருந்தவத்தை உலகமுழுவதிலுமுள்ள அரசர்களில் வேறு யாவர் செய்துள்ளார்? [ஒருவரும் செய்திலர் என்றபடி]; (எ - று.)-தான் - அசை. கீழ்க்கவியில் 'நீ வர யான்புரி தவம் யாது?' என்று சுருங்கச் சொல்லியதன் விவரணம் இது; கீழ்த் தொகுத்துச் சுட்டலாகக் கூறியதனை இங்கு வகுத்துக்காட்டலாக விளக்கியதாதலால், இது கூறியதுகூற லென்னுங் குற்றத்தின்பாற் படாது. (இச்செய்யுள், சில ஏட்டுப் பிரதிகளிலில்லை.) மிக்க இனிமையைக் குறித்தற்கு, தேனொடு கலந்த தெளிந்த அமிருதம் என்றார். 'இசையின் வீணைத் தேன் புரிந்த தெள்ளமுதால் அமுதுண்டோர் செவியிரதம் தெவிட்டுவிப்பாய்' என்ற சொற்போக்கில், நாரதனது திவ்வியகானாமிருதம் தேவாமிருதத்தினும் இனிதென்பது தோன்றுதல் காண்க. 'செவியுதரந்தெவிட்டுவிப்பாய்' என்றும் பாடமுண்டு. |