வஞ்சம் கஞ்சன் மாமன்உம் இ மைத்துனன்தான்உம் ஆய் - வஞ்சனையையுடைய மாமனாகிய கம்சனும் அத்தைமகனான இந்தச் சிசுபாலனுமாக, இறைவனுக்கு கிளைஞர் ஆய் எய்தி வந்தனர் - திருமாலாகிய கண்ணபிரானுக்கு உறவினராய் வந்து பிறந்தார்கள்; சிந்தையில் உணர்வீர் - (இச்செய்தியை) மனங்கொண்டு அறிவீர்களாக, என்று-, சித்து அசித்து உணர்ந்தருள் முனிஉம்-சித்தும் அசித்துமாகிய தத்துவப்பொருளின் இயல்பை அறிந்தருளிய வியாசமாமுனிவனும், கொண்டு உரைத்தான் - எடுத்துச்சொல்லியருளினான்; (அதுகேட்டு), அந்த மன் அவையின் இருந்துளோர் எல்லாம் - அந்தப் பெரியசபையிற் கூடியிருந்தவர்க ளெல்லாரும், அமலனை துதித்து அதிசயித்தார் - ஆச்சரியமடைந்து கண்ணபிரானைத் துதித்தார்கள்; (எ - று.) மன், ஓ- ஈற்றசை. 'கொண்டு' என்பதையும் அசை யென்னலாம். முத்திபெற விரும்புபவர் அறிய வேண்டிய தத்துவங்கள் மூன்று; அவையாவன-சித், அசித், ஈச்வரன். சித் - உணர்வுடையது; ஜீவாத்மா. அசித் - உணர்வில்லாதது; ஜடம். ஈச்வரன்-முழு முதற் கடவுளான பரமாத்மா. இம் மூன்றையும் தத்வத்ரய மென்பர். இவற்றில் சித்தையும் அசித்தையும் உணர்ந்தமை கூறியது, ஈச்வரனை யுணரந்தமைக்கும் உபலக்ஷணம். இந்நூலாசிரியர் மேல் நம்மாழ்வாரை "சித்தசித்தொடீச னென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் முடிவுகண்ட சதுர்மறைப் புரோகிதன்" என்றும், துரியோதனனை "சித்தசித்துணர்விலாதான்" என்றுங் கூறுதல் காண்க. ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய இம்மூன்று தத்துவங்களின் தன்மையைத் தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் காண்க. கிருதயுகமும் திரேதாயுகமும் இவர்கட்குச் சாபவிமோசனத்துக்கு உரிய காலமாகாது சாபானுபவத்துக்கேயுரிய காலமாய்க் கழிய, இந்தத் துவாபரயுகமே சாபந்தீர்ந்து முன்னையபதவியையடைதற்கு உரிய காலமாகுதலால், 'இந்தநல்உகம்' எனப்பட்டது. மன் அவை - ராஜ சபையுமாம். துதித்து அதிசயித்தார் - அதிசயித்துத் துதித்தார் என மொழிமாற்றி விகுதி பிரித்துக் கூட்டுக. (148) 149.- பலரும் கண்ணனைத்தியானித்துத் துதித்து வணங்குதல். வீடுமன்விதுரன்றுரோணனேமுதலாம்விரகிலாவுணர்வுடைவேந்தர், நாடினர்மனத்திற்புளகமுற்றுடலநயனநீர்மல்கநாக்குழறிப், பாடினர்புகழ்ந்துபரவினர்பரவிப்பைந்துழாய்கமழ்மலர்ப்பாதஞ், சூடினர்சுருதிக்கெட்டொணாதொளிருஞ்சுடர்மணித் துய்யசோதியையே. |
(இ - ள்.) வீடுமன் விதுரன் துரோணனே முதல் ஆம் - பீஷ்மனும் விதுரனும் துரோணனும் முதலான, விரகு இலா உணர்வுஉடை வேந்தர்- கபடமில்லாத அறிவையுடைய அரசர்கள், |