சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர்மணி துய்ய சோதியை - வேதங்களுக்கு எட்ட முடியாதபடி (அப்பாற்பட்டு) விளங்குகிற பிரகாசத்தையுடைய நீலநிறமுள்ள பரிசுத்தமான ஒளிவடிவமாகிய கண்ணபிரானை, மனத்தில் நாடினர் - மனத்திற்கொண்டு தியானித்து, உடலம் புளகம் உற்று - (ஆனந்தாதிசயத்தால்) உடம்பு மயிர்ச்சிலிர்ப்படையப்பெற்று, நயனம் நீர் மல் - கண்களில் ஆனந்தக் கண்ணீர்பெருக, நா குழறி-நாக்குக் குழறப்பெற்று, பாடினர்- பாடினார்கள்; புகழ்ந்து பரவினர் - கொண்டாடித் துதித்தார்கள்; பரவி-அங்ஙனம் துதித்து, பைந்துழாய் கமழ்மலர் பாதம் சூடினர்-பசுமையான திருத்துழாய் மணம் வீசப்பெற்ற தாமரை மலர் போன்ற (அக்கண்ணனது) திருவடிகளைத் தமது சிரத்தின் மேற் கொண்டு வணங்கினார்கள்; (எ - று.) விதுரன் பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிறிய தந்தை; விசித்திர வீரியராசனது மனைவியரிலொருத்தியான அம்பிகையினா லேவியனுப்பப்பட்ட தாதியினிடத்து வியாசமாமுனிவனருளாற் பிறந்தவன்; யமதருமராசனது அம்சமானவன். துரோணம்-பரத்வாஜமுனிவனது குமாரன்; கிருபாசாரியருடன் பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை; துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன். வைதிகவிரதாநுட்டானஞ் செய்துகொண்டிருக்கையில் தேவர்களா லேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட பரத்துவாச முனிவனது விருப்பத்தால் ஒருதுரோண கும்பத்திற் பிறந்தமைபற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர்: துரோணகும்பம் - பதக்களவு கொண்ட பாத்திரம்; [துரோணம்-பதக்கு, இரண்டுமரக்கால்]. இவன் பிராமணசாதியிற் பிறந்தவனாயினும், குருகுலத்து ராஜகுமாரர்களுக்குப் படைக்கலப்பயிற்சி கற்பிக்குந் தொழிலை மேற் கொண்டது முதல் வீடுமன் சொன்னபடி குடை கொடி முதலிய ராஜசின்னங்கள் பலவற்றையும் ஏற்று க்ஷத்திரியன் போன்று ஒழுகியதனால், இவனையுஞ்சேர்த்து 'வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் வேந்தர்' என்றார்; அதனை "முனிநீஐயா இதற்குமுன்னம் இன்றுமுதலா, இனி இவ்வுலகுக்கு அரசாய் எம்மிலொருவனாகிக், குனிவில் வலியா லமருங் கோடி யென்று கொடுத்தான், பனிவெண்குடையும் நிருபர்க்குரியவரிசை பலவும்" என வாரணா வதச்சருக்கத்திற் கூறியதனாலுணர்க. மயிர்ச்சிலிரிப்பும், கண்ணீர்பெருகுதலும், நாக்குழறுதலும் - பேரானந்தத்தின் மெய்ப்பாடுகள். புளகம், நயநம்-வடசொற்கள். துழாய் - அடியார்கள் இட்டு அருச்சித்தது. 'சூடினர்' என்ற வினையின் ஆற்றலால் எம்பெருமானது திருவடித்தாமரை மலர்அடியார்களின் முடிக்கு அலங்காரமென்க. விரகிலா உணர்வு - விபரீதஞானமில்லாத உண்மையறிவு. மணி - நீலரத்தினமுமாம். (149) |