150.- தருமபுத்திரன்அனைவர்க்கும் பூஜோபசாரங்களைச் செய்தல். அப்பொழுதமலனருஞ்சினமொழிந்தாங்கருளுடையறத் தின்மைந்தனைப்பார்த், திப்பொழுதரசரானவர்க்கெல்லாமிருஞ்சிறப்புதவுகென்றிசைப்ப, முப்பொழுதுணருமுனிவரன்பணியான்முறைமுறைபூசனைபுரிந்தான், மைப்பொழுதொளிகூர்வெண்ணிலவுமிழுமதிகுலத்துதித்தருண் மன்னன். |
(இ - ள்.) அ பொழுது - (அனைவரும் துதித்து வணங்கிய) அப்பொழுது, அமலன் - கண்ணபிரான், அருஞ் சினம் ஒழிந்து - (பிறர் அணுகுதற்கு) அரிய கோபம்தணியப்பெற்று, ஆங்கு-அவ்விடத்தில், (அருகிலுள்ள), அருள் உடை அறத்தின் மைந்தனை பார்த்து-(எல்லாவுயிர்களிடத்துங்) கருணையையுடைய தருமபுத்திரனை நோக்கி, இ பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இருஞ்சிறப்பு உதவுக என்று இசைப்ப -'இப்பொழுது நீ அரசராயுள்ளாரனைவர்க்கும் சிறந்த உபசாரங்களைச் செய்வாயாக' என்று கட்டளையிட,-மை பொழுது ஒளி கூர் வெள் நிலவு உமிழும் மதிகுலத்து உதித்தருள் மன்னன் - இருளுக்கு உரிய இராக்காலத்திலே பிரகாசம் மிக்க வெண்ணிறமான நிலாவை வீசுகின்ற சந்திரனதுவம்சத்தில் தோன்றிய தர்மராஜன்,-மு பொழுது உணரும் முனிவரன் பணியால் - மூன்றுகாலத்து வரலாறுகளையும் அறிந்த இருடிச் சிரேஷ்டனான வியாசமா முனிவனது கட்டளையினால், முறை முறை பூசனை புரிந்தான் - முறைமை தவறாது (அரசர்கட்கெல்லாம்) பூஜோபசாரங்களைச் செய்தான்; (எ - று.) வியாசமாமுனிவன் சொல்லியருளியவாறு முதலிற் கண்ணபிரானுக்கும் பிறகு மற்றையோர்க்குமாக அவரவர் தகுதிக்கு உரிய முறைப்படி சிறப்புச் செய்தனனென்க. கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம்; (இச்சொற்கு இப்பொருள் நச்சினார்க்கினியருரையிற் கண்டது.) சிசுபாலன் மீது கோபங்கொண்ட கண்ணபிரான் அக்கோபத்தின் காரியமாகிய சிசுபால வதத்தை நடத்தி முடித்தபின்பும் சிறிதுநேரம் கோபந்தணியாது நிற்க, கோபத்தின் தொடர்ச்சியாகிய அச்சினம் அனைவரும் வணங்கித் துதித்ததனால் தணிந்ததென்க; (நரசிங்கமூர்த்திக்கு இரணியன்மேலெழுந்தகோபம் அவனைக் கொன்றபின்பும் தணியாததாக, அதுகண்ட பிரமன் முதலியோர் துதித்து வணங்க அச்சிங்கப்பிரான் சினந்தணிந்தமை, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) உதவுகென்று - தொகுத்தல்: முப்பொழுது-இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்; இது - இங்குக் காலவாகுபெயராய், அக்காலங்களில் நிகழ்ந்தவையும் நிகழ்கின்றவையும் நிகழ்பவையுமான செய்திகளைக் குறித்தது. ஈற்றடி, எங்கும் விளங்கும் புகழோடு இயல்பிலே தண்ணளியையு முடையவன் தருமபுத்திரன் என்ற குறிப்பு. தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால், தருமனெனப்படுகிற யமன் இங்கு 'அறம்' என அஃறிணை வாய்பாட்டுச் சொல்லாற் கூறப்பட்டான். ஆங்கு - அசையுமாம். கூர் - உரிச்சொல். (150) |