151.-முனிவர்களும் கண்ணனும்தம்தம் இடஞ்சேர்தல். அருமறைமுறையாலரசனைமுனிவரனைவருமாசிசொற்றருளித், தருநிரைபயிலுந்தத்தமவிபினஞ்சார்ந்தனர்தகவுடன்மீளக், கருமுகிலனையமேனியங்கருணைக்கண்ணனுங்கிளையுடன்றுவரைத், திருநகரடைந்தான்சென்றுவன்றிறல்கூர்சேதிபப்பெரும்பகைசெகுத்தே. |
(இ -ள்.) முனிவர் அனைவர்உம் - இருடிகளெல்லோரும், அரசனை - தருமராசனை, அருமறை முறையால் ஆசி சொற்று அருளி - அருமையான வேதங்களின் விதிப்படி ஆசீர்வாதஞ் சொல்லி அநுக்கிரகித்து, தகவுடன் - தகுதியான உபசாரம் பெற்றவர்களாய், தரு நிரை பயிலும் தம்தம விபினம் மீள சார்ந்தனர் - மரங்களின் தொகுதி பொருந்திய தாம் தாம் வசிக்குந்தபோவனத்துக்கு மீண்டும் சென்றார்கள்; கருமுகில் அனைய மேனி அம் கருணை கண்ணன்உம் - காளமேகம்போன்ற திருமேனி நிறத்தையும் அழகிய திருவருளொழுகும் கண்களையு முடையவனான ஸ்ரீகிருஷ்ணனும், வல்திறல் கூர் சேதிபன் பெரும்பகை செகுத்து-வலிய பல பராக்கிரமம் மிக்க சேதி தேசத்தரசனான சிசுபாலனாகிய பெரியபகைவனை யொழித்தவனாய், கிளையுடன் சென்று துவரை திருநகர் அடைந்தான் - தனது சுற்றத்தாருடனே புறப்பட்டுத் துவாரகாபுரி யென்கிற தனது சிறந்த நகரத்தைச் சேர்ந்தான்; கண்ணனது திருவவதாரத்தில் முக்கியமான பயன்களிலொன்றும் கண்ணன் தருமனது இராயசூய யாகத்துக்கு வரப் புறப்பட்டபோது கொண்ட உத்தேசமும் சிசுபாலவத மாதலால், அக்காரியத்தைச் செய்துமுடித்து வெற்றி தோன்ற மீண்டெழுந்தருளின னென்பது விளங்க, 'சேதிபப்பெரும்பகை செகுத்துச் சென்று திருநகரடைந்தான்' என்றார். மறைமுறையால் ஆசி சொற்றருளி - வேதமந்திரங்களைக் கொண்டு ஆசீர்வாதஞ் சொல்லியருளி எனினுமாம். விபிநம் - வடசொல். 'அம்கருணைக்கண்ணன்' என்பதற்கு அழகிய திருவருளையுடைய கிருஷ்ணனென்றும் பொருள் கொள்ளலாம். முந்தின பொருளில், கண்ணனது கண்ணோட்டமுடைமை அவனது கண்களின் பார்வையிலே வெளியாகின்ற தென்பது கருத்து. துவரை - வடசொற்சிதைவு. கிளையுடன் - பலராமன் முதலியோருடன். (151) 152.-துரியோதனன் முதலியோர்தம்தம் நகர்க்கு மீளுதல். அராவவெங்கொடியோனாதியாவுள்ளவரசருந்தன்னகரடைந்தார், விராடனும்யாகசேனனுமுதலாம்வேந்தருந்தம்பதிபுகுந்தார், சராசனத்தடக்கைச்சல்லியன்முதலோர்கிளையுடன்றம்புரஞ் சார்ந்தார்,பரா வருமுதன்மைப்பாண்டவர்கடற்பார்பண்புறத்திருத்தியாண்டிருந்தார். |
(இ -ள்.) அராவம் வெம் கொடியோன் ஆதி ஆ உள்ள அரசர் உம் - பாம்பின்வடிவ மெழுதிய பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன் முதலாக அங்கு வந்துள்ள குருகுலத்து அரசர்களும், தம்நகர் அடைந்தார் - தங்களுடைய அஸ்தினாபுரிக்குப் போய்ச்சேரலானார்கள்; விராடன்உம் யாகசேனன்உம் முதல் ஆம் |