களான) முனிவர்களின் பகுப்பினர்க்கும், மும் மதம் கைமுகம் களிறு மன் குலத்தவர்க்குஉம் - மூன்றுவகை மதஜலத்தையும் துதிக்கையுள்ள முகத்தையுடைய யானைச்சேனையையுடையவர்களான ராசகுலத்தவர்க்கும், வான்குலத்தவர்க்குஉம் - தேவசாதியார்க்கும், வரம்பு இலா வகை கலை தெரியும் நல் குலத்தவர்க்கு உம்-அளவற்ற பலவகைச் சாஸ்திரங்களை ஓதியுணர்ந்த சிறந்த புலவர் வகுப்பினர்க்கும், நாள்தோறும்-தினந்தோறும், புகழ்மிகவளர்வான் பொருள் எலாம் நல்கி - கீர்த்தி மிகவும் விருத்தியாம்படி (பொன் ஆடை அணிகலம் முதலிய) பொருள்களையெல்லாம் கொடுத்து, தன் குலம் கதிர்போல் தேய்ந்து ஒளிசிறந்தான்-தான் பிறந்த குலத்துக்கு ஆதிபுருஷனான சந்திரன்போலச் சுருங்கி ஒளி மிகுந்தான்; (எ - று.) "அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்" என்றபடி, சந்திரன் தன் கலைகளாகிய அமிருத கிரணங்களைத்தேவர்கட்கு உண்ணக் கொடுத்துத் தான் கலைகுறைந்தும் சிறப்புமிகுதல் போல, தருமராசன் தனது பொருள்களை யெல்லாம் பூதேவராகிய அந்தணர் முதலியோர்க்குக் கொடுத்துச் செல்வங் குறைந்தும் தேஜசினாலும் புகழினாலும் மிக்கனன் என்பதாம். ஒளி - காந்தியும் புகழும். இனி, சந்திரன் போலத் தேய்ந்தும் (அச்சந்திரனினும் மேலாக) ஒளி சிறந்தான் என்று பதவுரைகூறி, சந்திரன் கலை குறைந்து வடிவு தேய்ந்த காலத்தில் ஒளி குறைவதுண்டு: அங்ஙனமின்றித் தருமபுத்திரன் பொருள்களெல்லாம் நல்கியதனாற் செல்வம் தேய்ந்தும் ஒளி குறையாது அக்கொடையினாலாகும் மகிழ்ச்சிபற்றி மிக விளங்கினானென்று கருத்துக்கொள்ளுதலு மொன்று: சந்திரன் கலை தேய்ந்த காலத்தும் ஒளி செய்துசிறத்தல்போலத் தருமராசனும் பொருள் தேய்ந்தும் ஒளியுற்றுவிளங்கின னென்றுங் கொள்க. சந்திரன் முதலிற் கலை குறைந்தனனாயினும் உடனே கலை வளரப்பெறுதல்போலத் தருமனும் முதலிற் கொடையினாற் செல்வந் தேய்ந்தனனாயினும் பின்பு விரைவிற் செல்வம் வளரப் பெற்றன னென்ற கருத்தும் அமையும். கொடுக்கக் கொடுக்கப் புண்ணியத்தாற் செல்வம் பெருகுதலியல்பு. 'தன்குலக்கதிர்போ லேந்தொளி சிறந்தான்' என்று பாட மோதுவாருமுளர்; ஏந்துஒளி - சிறந்த ஒளி. ஒருகுலத்தவனுக்கு அக்குலத்து முதல்வனை உவமை கூறுதல் ஏற்கும். அளியாவது - அன்புகாரணத்தால் தோன்றும் அருள். தீவினைக்கு ஏற்ற தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மராஜ னென்று வடமொழியில் ஒரு பெயர்; தந்தையே மைந்தனாகிறா னென்னும் வழக்குப்பற்றி, தருமராஜன் புத்திரனை 'தருமராசன்' என்றார். இவனும் தருமந்தவறாது காப்பவ னாதலால், அவனையே தர்மராச னென்று குறித்தலும் தகும்: கல்வி கரையிலவாதலாலும், அதன் பகுப்புக்கள் பலவாதலாலும், 'வரம்பிலாவகைக் கலை' எனப்பட்டது. 'புகழுடன் வளர்வான்' என்பதும் பாடம். (153) இராயசூயச்சருக்கம் முற்றிற்று. |