பக்கம் எண் :

167

இரண்டாவது

சூதுபோர்ச் சருக்கம்

    துரியோதனனது தூண்டுதலாற் சகுனியுடன் தருமபுத்திரன் ஆடிய
சூதாட்டத்தைக் கூறும் பாகமென்று பொருள்.  படைகளைக்கொண்டு செய்யும்
போரில் வெற்றி தோல்விகளால் இராச்சியத்தைப் பெறுதலும் இழத்தலும்
நிகழ்தல்போல, காய்களைக்கொண்டு செய்யும் இச்சூதாட்டத்திலும் வெற்றி
தோல்விகள் காரணமாகப் பொருள்களைப் பெறுதலும் இழத்தலும் நேர்வதனால்
சூதாட்டத்தைப் போராக உருவகப்படுத்தி "சூதுபோர்" என்றார்.  சூதுபோர் -
சூதாகிய போர், என இருபெயரொட்டுப் பண்புத்தொகை;
"வன்றொடரல்லனமுன் மிகா அல்வழி" என்றபடி ஒற்று இடையே மிகாத
நெடிற்றொடர்முன் அல்வழியில் வலி இயல்பாயிற்று.  பொருவது - போர்
எனக் காரணக்குறி.  போர்ச்சருக்கம் - போரைக் கூறுஞ் சருக்கமென
இரண்டனுருபும் பொருளுந் தொக்க தொகை:  போரினது சம்பந்தமான
சருக்கம் எனவிரித்தால், ஆறாம்வேற்றுமைத்தொகையாம்.
"யரழமுன்னர்க்கசதப" என்ற சூத்திரத்தின்படி, ரகரத்தின்முன் வேற்றுமையில்
வலிமிக்கது.

1.-தெய்வவணக்கம்: கிருஷ்ணஸ்துதி.

ஞான மாகிய பரம்பர வமிழ்தமாய்நவிரறு மயக்காகி
வான மாயுடன் வாயுவாய்த் தேயுவாய்வனமுமாய் மண்ணாகித்
தான மாமறை முறைமையிற் பற்பலசராசரங் களுமாகி [டோன்.
யேன மாயிவை யனைத்தையு மருப்பினாலேந்தினா னெனையாண்

     (இ -ள்.) ஞானம் ஆகிய பரம்பரம் அமிழ்தம் ஆய் - ஜ்ஞாநம் என்று
சொல்லப்படுகிற மிகச்சிறந்த அமிருதத்தின் சொரூபியாகியும், நவிர் அறு
மயக்கு ஆகி-குற்றமற்ற அஜ்ஞானமாகியும், வானம் ஆய் - ஆகாயத்தின்
வடிவமாகியும், உடன் வாயு ஆய் - அவ்வாறு வானமாயிருப்பதோடு வாயுவின்
வடிவமாகியும், தேயு ஆய் - அக்கினியின் வடிவமாகியும், வனமும் ஆய் -
ஜலத்தின் வடிவமாகியும், மண் ஆகி - பிருதிவியின் வடிவமாகியும், தானம்
ஆம் மறை முறைமையின் பல் பல சர அசரங்களும் ஆகி -(தனக்கு)
இருப்பிடமாகவுள்ள வேதங்களிற் கூறிய முறைமைப்படியே பலவகைப்பட்ட
ஜங்கமம் தாவரம் என்ற இவற்றின் வடிவமாகியும் நின்று,- ஏனம் ஆய் -
மகாவராகாவதாரஞ் செய்து, இவை அனைத்தையும் - கீழ்க்கூறிய இந்த
எல்லாப்பொருள்களையும், மருப்பினால் - (தனது) கோரதந்தத்தினால்,
ஏந்தினான் - (பிரளய வெள்ளத்திலிருந்து) குத்தியெடுத்தவனாகிய திருமால்,
எனை ஆண்டோன் - என்னை அடிமைகொண்டவனாவன்;  ( எ - று.)