பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 168

    ஸர்வநியந்தாவும் ஸர்வவியாபியும் ஸர்வரட்சகனுமாய் என்னை
ஆட்கொண்ட திருமாலே நான் வணங்குந் தெய்வமென்பது கருத்து.  வாழ்த்து,
தெய்வ வணக்கம், தலைமைப் பொருளுரைத்தல் என்னும் மங்கலங்கள்
மூன்றனுள், இது தெய்வவணக்கத்தின்பாற்படுமென அறிக;  திருமால் ஏனமாய்
மருப்பில் ஏந்தியதனால், சராசரங்களுக்கு ஆபத்துக்காலத்துத் தன்னை
அழியமாறியும் உதவுந் தன்மையனாதல் வெளியாம்.

     மிகவும் இனியதா யிருத்தலால், ஞானத்தை அமிர்தமாகக் கூறினார்.
பரம்பரம் - உயர்ந்தவற்றினும் உயர்ந்தது;  மிகவும் உயர்ந்த தென்றபடி.
'ஞானமாகிய பரம்பரவமிழ்தமாய்' என்பதற்கு - குரு சிஷ்ய பரம்பரைக்
கிரமத்திலே பெறப்பட்டு வருகிற  தத்துவஞானாமிருதமாய் என்று உரைத்தலும்
தகும்.  மயக்கு - மாயை; அஞ்ஞானம்.  பசையற்ற சம்சாரத்தைப்
பசையுள்ளதெனக் கருதுந் திரிபுணர்ச்சி போல்வன.  இம்மாயை போக்குதற்கு
அரியதாயினும் கடவுளையே சரணமாக அடைந்தாரைத் தானே விட்டு
நீங்குதலென்னுங் கட்டுக்கு அடங்கிநிற்றலால், நவிரறு மயக்கு என
விசேடித்துச் சொல்லப்பட்டது.  ("எனது மாயை கடத்தற்கு அரியது; யார்
என்னைச் சரணமாகப் பற்றுகிறார்களோ, அவர்களே, இமாயையைக் கடப்பர்"
என்று கீதையிற் கண்ணபிரான் கூறியது, இங்குக் கருதத்தக்கது.) இனி,
மாயையென்றும் அவ்யக்தமென்றும் மறுபெயர்களையுடைய பிரக்ருதியென்னுந்
தத்துவமும் பகவானது சொரூபமே யென்பதுபற்றி, 'நவிரறுமயக்காகி'
என்றதாகவுங் கொள்ளலாம்.  நவிர் - நவை.  'நவிலறுமயக்காகி' என்ற
பாடத்துக்கு - சொல்லுதற்கு அரியதான மாயையின் சொரூபியாய் என்று
பொருளாம்.  கடவுளை ஒன்றற்கு ஒன்று மாறான ஞான
அஜ்ஞானங்களின்வடிவமாயிருக்கின்றனனெனக் கூறியது, இவற்றிற்கு
அக்கடவுளே நியாமகனாயிருத்தலா லென்க.  மாறான பொருள்களின்
வடிவமுடையகடவுள், விருத்தவிபூதிகளெனப்படுவன்.

    பிறந்தபோது ஜாயமாந கடாட்சம் பெற்ற ஸாத்வீகப்ரக்ருதிகட்கு
ஞானத்தையும், தாமஸப்ரக்ருதிகட்கு அஞ்ஞானத்தையும் திருமால் தந்தருள்வ
னென அறிக.  உற்பத்திக்கிரமத்திலே ஆகாயத்திலிருந்து வாயுவும்,
வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து
நிலமும் பிறந்ததென வேத மோதுதலால், அக்காரணகாரிய முறைப்படியே
'வானமாயுடன் வாயுவாய்த் தேயுவாய் வனமுமாய் மண்ணாகி' என்றார்.
இடையிரண்டடி, எம்பெருமான் எல்லாப்பொருள்களின் சொரூபமானவ
னென்பதைவிளக்கும்;  "நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச்,
சீரார்சுடர்களிரண்டாய்ச் சிவனா யயனானாய்" என்றார், ஆழ்வாரும்.
வேதங்களில் பகவானது சொரூபம் வருணிக்கப்படுதல்பற்றி, அது அவனுக்கு
இருப்பிடமெனக் கொள்ளப்படுமாதலால், "தானமாமறை" என்றார்.  தானம் =
ஸ்தாநம்.  இனி, தானம் ஆம் மறை - கொடுத்தலைச் சிறப்பித்துக்கூறுகிற
வேதம் எனக் கூறுவாருமுளர்.  'மாமறை' என்றும் பிரிக்கலாம்.          (154)