பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 17

     இனி, வீணை - யாழினது, தேன்-தேன்போன்ற நரம்பினின்று, புரிந்த -
எழுந்த, இசையின் - கீதமாகிய, தெள் அமுதால் - சுத்தமான அமிருதத்தினால்
என்றும் உரைகொள்ளலாம்: இவ்வுரையில், தேன் என்றது-
தேனொழுக்குப்போன்ற வடிவையும் இனிமையையுமுடைய யாழ்நரம்பிற்கு
உவமையாகுபெயர்;  யாழ்நரம்புக்குத் தேனொழுக்கு உவமையாதலை
"பசும்பொன் யாழ்நரம்பு தேனார்த்தெனத் தீண்டி" என்ற சிந்தாமணியினாலும்
உணர்க.  அவநிபர் என்ற வடமொழிப்பெயர் - பூமியைக் காப்பவரென்று
பொருள்படும்; அவநி - பூமி.  இசையின், இன்-சாரியை.  அம்ருதம்-
மரணத்தைத் தவிர்ப்பது [சாவாமருந்து] என்று பொருள்படும்.  தெவிட்டுதல் -
தேக்கிடுதல்.

     மான் புரிந்த திருக்கரம் - இடத்திருக்கை.  சிவபிரான் மானேந்திய
கதை
:- ஒரு காலத்திற் சிவபிரான் தன்னை மதியாத தாருகவனத்து
முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின்
மனைவியர்களது கற்பு நிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு
விடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனஞ்செய்து,
தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள்
அபிசாரயாகமொன்று செய்து, அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள்
பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்
கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான், தன்மேற் சீறிவந்த நாகங்களை
ஆபரணங்களாகவும், பூதங்களைத் தனது கணங்களாகவுங்கொண்டு மானைக்
கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற்
காலாலூன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேலணிந்து, இங்ஙனமே
அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

     'மதியிருந்த வேணி' என்றதன்விவரம்:- தக்ஷமுனிவனது
புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும், மணஞ்
செய்துகொண்ட சந்திரன் பக்ஷபாதமாக அம்மகளிருள் உரோகிணி
யென்பவளிடத்தில் மிகவும் மோகங்கொண்டு எப்பொழுதும் அவளுடனே
கூடிவாழ்ந்து மற்றை மனைவியரை உபேக்ஷை செய்ய, அப்புதல்வியரின்
வருத்தத்தை நோக்கின தக்ஷமுனிவன் சந்திரனைக் கோபித்து
'க்ஷயமடைவாயாக' என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்து
கலைகளும் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம்
சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்
கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி
அநுக்கிரகித்தன னென்பதாம்.  இவ்வரலாற்றினால், சிவபிரான் தன்னைச்
சரணமடைந்தவர்களின் குறையைத் தீர்த்தருளுந் தன்மைய னென்பது
விளங்கும்.

     'நதிவேணி' என்றதிற் பொதிந்தவரலாறு:- திருமால் உலகமளந்த
காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்று அப்பிரா