பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 171

இலக்கணை. கூறலுற்றாம் - கவிகளுக்குரிய இயற்கைத் தனித்
தன்மைப்பன்மை.

     இதுமுதல் ஐம்பத்தொரு கவிகள் - பெரும்பாலும் ஒன்று நான்காஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.  இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்
களாகவே நிற்கும்.                                           (155)

3.-துரியோதனன் தம்பியரோடும்மற்றுமுள்ளாரோடும்
அத்தினாபுரி சேர்தல். 

கணைவரும் வரிவில்வாழ்க்கைக் கடுங்கன லனைய தோற்றத்
துணைவருந் தானுங் கங்காசுதனுமற் றெவருஞ் சூழ
இணைவரு மரச ரில்லா விகலரியேறு போல்வான்
கிணைவரு மோதை மூதூர்க்கிளர்நெடும் புரிசை புக்கான்.

     (இ -ள்.) இணை வரும் அரசர் இல்லா - (தனக்கு) ஒப்பாக அமைகிற
அரசரொருவரையும் பெறாத [எல்லா அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த] இகல்
அரி ஏறு போல்வான்-வலிமையுள்ள ஆண் சிங்கத்தை யொத்தவனாகிய
துரியோதனன்,-கணை வரும் -  அம்புகள் (தம்மிடத்தினின்றும்) வெளிவரப்
பெற்ற, வரி வில் - கட்டமைந்தவிற்களினாற் செய்யும் போர்த்தொழிலாகிய,
வாழ்க்கை - வாழ்க்கையையும், கடுங்கனல் அனைய தோற்றம் - கொடிய
நெருப்புப்போன்ற [உக்கிரமான] தோற்றத்தையுமுடைய, துணைவரும்-(தனது)
தம்பிமார்களும், தானும்-தானுமாக, - கங்கா சுதனும் - கங்கையின் புத்திரனான
வீடுமனும், மற்று எவரும் - பற்றுமுள்ள கர்ணன் முதலியவர்களும், சூழ-
(தன்னைச்) சூழ்ந்துவர,- கிணைவரும் ஓதை-மருதப்பறையினின்று எழுகின்ற
ஓசையையுடைய, முது ஊர் - பழமையான அத்தினாபுரியினது, கிளர்நெடும்
புரிசை-விளங்குகின்ற நீண்ட மதிலின் உட்பக்கத்தில், புக்கான் - சென்று
சேர்ந்தான்; (எ - று.)

    இச்செய்யுள் - "அராவவெங்கொடியோ னாதியாவுள்ள வரசருந்
தந்நகரடைந்தார்" என்று கீழ்ச்சருக்கத்தில் வந்துள்ளதன் அநுவாதம்;
தொடர்ச்சி தோன்றக் கூறியது:  கூறியதுகூறலன்று.  வாழ்க்கை -
மகிழ்ச்சியாகச் செய்யுந் தொழில்.  எப்பொழுதும் மாறாத சினத்தையுடையரா
யிருத்தலால், துரியோதனனது துணைவர்க்கு 'கடுங்கனலனைய தோற்றம்' என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  அரியேறுபோல்வான் - தன்னையெதிர்த்த
அரசர்களாகிய யானைகளை அழிக்கவல்ல சிங்கம் போன்றவனென்க.
மிருகராஜனாகிய சிங்கம்போலத் தனது திறத்தினால் ராஜ ராஜனாயுள்ளவ
னென்றவாறுமாம்.  கிணை - மருதநிலப்பறை. ''புரிசை" என்ற மதிலின் பெயர்,
இங்கு அரண்மனைக்கு இலக்கணையென்க.  துணைவரும் தானும் புக்கான் -
சிறப்பினால் ஒருமை முடிபைக்கொண்ட பால்வழுவமைதி: [நன் - பொது-27.]
அனைய-குறிப்புப்பெயரெச்சம்:  அன் - இடைச்சொற்பகுதி.