பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 172

     வீடுமனை கங்காசுதன் என்றதன் விவரம்:-  முன்னொரு காலத்தில்
தேவர்கள் யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற் சென்று கங்காநதியின்
பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை
உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும் அவன்மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்; அதனையறிந்த நான்முகக் கடவுள், வருணனைப் பூமியில்
மானுடப் பிறப்பெடுக்கவும் கங்கையை மானுடமகளாய் அவளைச் சிலநாள்
மணந்திருக்கவும் சபித்திட்டான்:  அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்;  கங்கையும் ஓர் மனிதமகளாகி 'யான் எந்தத்
தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது' என்னுங் கோட்பாட்டினோடு அவனை
மணஞ்செய்துகொண்டாள்.  இது நிற்க:  பிரபாசனென்னும் வசு, தன்
மனைவியின் சொல்லைக்கேட்டு, வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்;  மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்;
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங்கொடுத்தான்.
எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின்வயிற்றிற் பிறந்தனர்.  முதலிற்
பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்த அப்பொழுதே தாய் கங்காநதியில்
எடுத்தெறிந்து விட்டாள், எட்டாவது பிள்ளை பிறந்தவுடனே தந்தை
'இக்குழந்தையைக் கொல்லலாகாது' என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.                  (156)

4.-மறுநாள் துரியோதனனதுசபையில் யாவரும்
வந்துசேர்தல்.

சென்றுழி யெவருந் தத்தஞ்செழுமனை யெய்தி வாசந்
துன்றிய வமளி கங்குற்றுயில்புரிந் தெழுந்த பின்னை
நின்றவெம் பரிதித்தோற்றந் தொழுதுதந் நியம முற்றி
வன்றிற லரசன் கோயின்மன்னவை வந்து சேர்ந்தார்.

     (இ -ள்.) எவரும் - (துரியோதனனுடன் வந்த) அரசர்களெல்லாரும்,
சென்றஉழி - (அவ்வத்தினாபுரியைப்) போய்ச் சேர்ந்த பின்பு, தம்தம்
செழுமனை எய்தி-தங்கள் தங்களுடைய வளமுள்ள வீடுகளை யடைந்து,-வாசம்
துன்றிய - வாசனைமிக்குள்ள, அமளி - மலர்ப்படுக்கையில், கங்குல் -
இரவிலே, துயில் புரிந்து - தூங்குவதைச் செய்து, எழுந்த பின்னை -
கண்விழித்து எழுந்தபிறகு, நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது -
(கீழ்த்திசையிற்) பொருந்திய வெப்பமுள்ள சூரியனுடைய உதயத்தை [உதயஞ்
செய்த சூரியனை] வணங்கி, தம் நியமம் முற்றி - தாங்கள் (காலையிற்)
செய்யவேண்டிய கடமைகளையெல்லாஞ் செய்து முடித்து,-வல் திறல் அரசன்
கோயில் - மிக்கவலிமையுள்ள துரியோதன ராஜனது அரண்மனையிலுள்ள, மன்
அவை - ராஜசபையை, வந்துசேர்ந்தார் - வந்து அடைந்தார்கள்; (எ - று.)