பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 173

    ராயசூயயாகம் முடிந்ததும் இந்திரப்பிரத்தத்திலிருந்து துரியோதனனோடு
வந்த அரசர்களெல்லோரும், அத்தினாபுரியையடைந்து தம்தம் மாளிகையிற்
சென்று இரவில் துயின்று, மறுநாட்காலையில் துயிலுணர்ந்து காலைக்கடன்
முடித்து மீண்டு ராஜசபையைச் சேர்ந்தன ரென்றவாறு.  சூரியோதயகாலத்தில்
தவறாமற் செய்யவேண்டிய சந்தியாவந்தநம், உபஸ்தாநம், சூரிய நமஸ்காரம்
முதலிய வைதிகநித்தியகர்மாநுஷ்டாநங்களை அவ்வரசர்கள் செய்துமுடித்தமை,
மூன்றாமடியினால் விளக்கப்பட்டது.

     சென்றுழி - பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  கோ இல்-கோவில்
என வரற்பாலது கோயிலென வந்தது, இலக்கணப்போலி:  தத்தம் - தாம்தாம்
என்பதன் விகாரமாகிய தந்தம் என்பதன் வலித்தல்.  வன்திறல் -
ஒருபொருட்பன்மொழி;  மிக்க திறமென்க.  கோயில் - அரண்மனை;
ராஜகிருகம்.  மன் - பெருமை; அதனையுடையவனுக்கு, பண்பாகுபெயர்.(157)

5.-துரியோதனன் மன்னவர்கட்குஆசனமளித்துக்
கவலையுடன் இருக்க, கர்ணன் ஒன்று சொல்லத்
தொடங்குதல்.

இறைஞ்சிய வேந்தர்க் கெல்லாமிருப்பளித் தெதிர்ந்த வேந்தர்
நிறஞ்செறி குருதி வேலானினைவினோ டிருந்த போதில்
அறஞ்செறி தானம் வண்மையளவிலா தளித்து நாளும்
புறஞ்சுவர் கோலஞ் செய்வான்பூபதிக் குரைக்க லுற்றான்.

     (இ -ள்.) எதிர்ந்த வேந்தர் - (தன்னை) எதிர்த்துவந்த அரசர்களது,
நிறம் - மார்பில், செறி - நிறைந்துள்ள, குருதி - இரத்தம் தோயப்பெற்ற,
வேலான் - வேலாயுதத்தை யுடையவனான (துரியோதனன்)-இறைஞ்சிய
வேந்தர்க்கு எல்லாம் - (அப்பொழுது வந்து தன்னை) வணங்கிய
அரசர்களெல்லார்க்கும், இருப்பு அளித்து - ஆசனங் கொடுத்து,
நினைவினோடு இருந்தபோதில் - (மனதிற் சிந்தையோடு) இருந்த சமயத்தில்-
அறம் செறிதானம்-தருமமார்க்கம் நிரம்பிய தானத்தையும், வண்மை-
தியாகத்தையும், நாளும்-தினந்தோறும், அளவு இலாது அளித்து-
எல்லையில்லாமற் கொடுத்து, புறம் சுவர் கோலம் செய்வான் - சுவரினது
வெளிப்புறத்தை அலங்காரஞ்செய்பவனாகிய கர்ணன், பூபதிக்கு -
அத்துரியோதன மகாராஜனுக்கு, உரைக்கல் உற்றான் - சொல்லத்
தொடங்கினான்; (எ - று).-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    'நிறஞ்செறி' என்பதை வேலுக்கு அடைமொழியாக்கி, மார்பிற் புகுகின்ற
வேலையுடையவ னெனக் கூறலுமாம்.  இனி, முன்னிரண்டடியை
யாற்றுநீர்ப்பொருள்கோளாகக்கொண்டு தன்னை வணங்கிய அரசர்கட்கெல்லாம்
(பூமியில்) இருக்குமாறு இராச்சியங்கொடுத்து, எதிர்த்தவர்களுடைய மார்பிற்
சென்று தைத்த இரத்தந்தோய்ந்த வேலாயுதத்தையுடையவ னென்று