பொழுதுபோக்காகவுடையவனான கர்ணன் சொல்லிய வார்த்தையும், வேந்தர்வேந்தன் இதயமும்-ராஜராஜனாகிய துரியோதனனது மனக்கருத்தும், ஒன்று ஆய் நின்ற இயற்கையை - (மாறுபடாமல்) ஒரேவிதமாய் ஒற்றுமைப்பட்டிருந்த தன்மையை, கண்டு-பார்த்து,-'புதை நகம் மடங்கல்- (யானை முதலிய விலங்குகளைக் கொல்லுதற் பொருட்டு) வெளிநீட்டாமல் உள்ளேயே சுருக்கிக்கொண்டுள்ள நகங்களையுடைய ஆண்சிங்கமானது, நாளும்-எப்பொழுதும், புறம் செலாது ஒடுங்கும் ஆனால்-வெளியேசெல்லாமல் (மலைக்குகைகளிற்) பதுங்கிக்கிடந்தால், மதம் கரி விடுமோ-(அதன்முன் அஞ்சியழிதற்கு உரிய) மதங்கொண்டுள்ள ஆண் யானை அதனை எதிர்க்காதொழியுமோ? [எதிர்க்குமன்றோ?,' என்றபடி] என்றான்-என்று கூறினான்; (எ - று.) தக்கசாதனங்களைப் பெற்றிருத்தலால் தருமபுத்திரனை வலியழித்து இருந்த இடந்தெரியாது அடக்கவல்ல நீ இவ்வாறு அடங்கியிருந்தால் தருமபுத்திரன் உன்னுடைய தகுதிதெரியாது உன்னிலும் மேம்படுகின்றானென்னும் பொருள்பட நிற்றலால், பின்னிரண்டடி- பிறிதுமொழிதலணியாம். தனது நகங்களை உள்வாங்கவும் வெளிநீட்டவும் வல்லதாகையால், சிங்கம் 'புதைநகமடங்கல்' எனப்பட்டது: இனி, 'புதைநகம்' என்பதற்கு-(யானை முதலிய விலங்குகளின் உடம்பிற்சென்று) அழுந்துகின்ற நகம் எனினுமாம். சகுனி தன்மருமகனான துரியோதனனை மனத்தளர்வின்றி உற்சாகமடைவிக்கவும், வீரத்தால் வெல்லமுடியாத தருமனைத் தான் செய்யுஞ் சூதுவழியாற் கெடுக்குமாறு துரியோதனனைத் தன்வழியே இசை விக்கவுங் கருதி, தருமனை யானை யென்று தாழ்த்தியும், துரியோதனனைச் சிங்கமென்று சிறப்பித்தும் இங்ஙனம் முகமன் கூறினனென்க. துரியோதனனுக்கு 'ராஜராஜன்' என்று ஒரு பெயருள்ளதனால், இங்கே 'வேந்தர்வேந்தன்' என்றது. சகுனி - காந்தாரதேசத்து அரசன் சுபல னென்பவனது புத்திரன்: திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவ னாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சூதாடுவதில் மிகவல்லவன்; பழிக்குச் சிறிதும் அஞ்சாது பிறர் கூறும் பழிமொழியையே தனக்குப் பெரும்புகழாகப்பாவித்து அவ்வசை மிகுமாறு தீவழியிலேயே நடப்பவனென்பார், சகுனிக்கு 'வசையிசையாகக் கொள்வான்' என்று ஒரு பெயர் கூறினார். ஒற்றுமைப்பட்டு வாழவேண்டிய துரியோதனாதியரையும் பாண்டவரையும் அங்ஙனம் வாழவொட்டாது பேதப்படுத்தி அத்தீச்செயல் காரணமாகச் சகுனி மேம்படக் கருதுகின்றமை காண்க. கர்ணன் - இடையெழுவள்ளல்களில் ஒருவனாதலால், 'விதரண வினோதன்' என்றார்; (மற்றையோர்-அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் என்பர்) மடங்கல் - பிடரிமயிர் மடங்கப்பெற்றதென ஆண்சிங்கத்திற்குக் காரணக்குறி. கரீ - கரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும்: கரம் - கை: இங்கே, துதிக்கை. ஈற்றடியில், முரண்தொடைகாண்க. (160) |