பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 177

 8.- துச்சாசனன் வார்த்தை.

சொல்லிடை நஞ்சு கக்குந்துன்மதி யுடைய தம்பி
வில்லிடை நின்று தம்முன்வெம்மனங் களிக்கச் சொன்னான்
அல்லிடை நிறைந்த தேனுமமுதவெண் கிரணத் திங்கள்
எல்லிடை யிரவி முன்னரெவ்வுழி நிகர்க்கு மென்றே.

     (இ -ள்.) சொல் இடை நஞ்சு கக்கும் துன்மதி உடைய தம்பி -
சொல்லுஞ்சொற்களிலே விஷஞ்சொரியும்படியான [மிகக் கொடிய
சொற்களையுடைய] தீய அறிவுள்ள தம்பியாகிய துச்சாசனன்,-வில் இடைநின்று
- (துரியோதனனுக்கு எதிரில்) விற்கிடை தூரத்தில் நின்றுகொண்டு, 'அல்லிடை
நிறைந்தது ஏனும்-இராக்காலத்தில் ஒளிமிக்கு விளங்குவதாயினும், வெள்அமுதம்
கிரணம் திங்கள் - வெண்மையாகிய அமிருதமயமான ஒளியையுடைய சந்திரன்;
எல்லிடை - பகற்காலத்தில், இரவி முன்னர் - சூரியனது எதிரில், எ உழி
நிகர்க்கும் - எவ்வாறு ஒத்திருக்கும்?' என்று-, தம்முன் வெம் மனம் களிக்க -
தமையனாகிய துரியோதனனது கொடிய மனம் மகிழ்ச்சியடையுமாறு,
சொன்னான்-; (எ - று.)- ஏ - ஈற்றசை.

    இராக்காலத்திலே நட்சத்திரக்கூட்டங்களிடையிற் சந்திரன் ஒளி
மிக்குத்தோன்றினாலும் பகற்காலத்திலே சூரியனொருவனுக்கு முன் ஒளி
மழுங்குதல்போல, தருமபுத்திரன் பல சிற்றரசர்களிடையில் மிக்க மேம்பாடு
பெற்று விளங்கினாலும் ராஜராஜனான துரியோதனனாகிய உனக்கு முன்னே
சிறிதும் மேன்மை பெற்று விளங்கானென்பது, பின்னிரண்டடிகளின் கருத்து;
உபமானமே உபமேயக்கருத்தை விளக்கிநிற்றலால், பிறிதுமொழிதலணி. நாம்
அடங்கியிருக்கிற இச்சமயத்தில் தருமபுத்திரன் சிறப்புற்று விளங்கினாலும், நாம்
வெம்மையோடு எழுமிடத்து அவன் அடங்கியேவிடுவ னென்ற குறிப்பு, இது.
'சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடைய' என்ற அடைமொழியினால், 'தம்பி'
என்றது-எல்லாத் தம்பிமார்களினும் மிக்க கொடுமையையுடையவனான
துச்சாசனனைக் குறித்தது:  ஆகவே, துரியோதனன், கர்ணன், சகுனி,
துச்சாசனன் என்ற துஷ்டசதுஷ்டர்கள் கீழ் 5 - ஆஞ் செய்யுள் தொடங்கி
முறையே கூறப்பட்டுள்ளவாறு காண்க.  வில் இடை - ஒருவில் கிடத்தற்கு
உரிய இடம்; அது, நான்கு முழதூரமுள்ளது.  சந்திரன் அமிருத கிரண
னாதனாலால், 'அமுத வெண் கிரணத்திங்கள்' எனப்பட்டான்.  கிரணம் -
தற்சமவடசொல்.  தம்பி, தாம்-பகுதி, பி - முறைப்பெயர்விகுதி.  முன் -
காலவாகு பெயர்.                                            (161)

9.-துரியோதனன் பேசத்தொடங்குதல்.

தமையனுந் தம்பி சொன்ன தன்மையையுணர்ந்து நீதி
அமைதரு தந்தை கேட்பவவன்பெருந் தாதை கேட்பக்
கமைபெறு விதுரன் கேட்பக்கார்முகக் கன்னன் கேட்ப
இமையவன் றுரோணன் கேட்பயாவருங் கேட்பச் சொல்வான்.