பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 178

     (இ -ள்.) தமையனும்- (அத்துச்சாசனனுக்கு) அண்ணனாகிய
துரியோதனனும், தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து - தனது தம்பியாகிய
துச்சாசனன் சொன்ன வகையை அறிந்து,-நீதி அமைதருதந்தை கேட்ப -
நியாயமார்க்கம் பொருந்தப்பெற்ற (தனது) பெற்ற தந்தையான திருதராஷ்டிரன்
கேட்கவும்,-அவன் பெருந்தாதை கேட்ப - அத்திருதராட்டிரனது பெரிய
தந்தையாகிய வீடுமன் கேட்கவும், கமை பெறு விதுரன் கேட்ப -
பொறுமையைக் கொண்டுள்ள விதுரன் கேட்கவும்,-கார்முகம் கன்னன் கேட்ப -
விற்போரில்வல்ல கர்ணன் கேட்கவும்,- இமையவன் துரோணன்கேட்ப -
(பூமியில்) தேவன்போல விளங்குகின்றவனான துரோணாசாரியன் கேட்கவும்,-
யாவரும் கேட்ப - மற்றும் அங்கு வந்துள்ளவர்களெல்லாரும் கேட்கவும்,-
சொல்வான் - கூறுபவனானான்;  (எ - று.)-அதனை, அடுத்த மூன்று
கவிகளிற்காண்க.

    இயற்கையில் திருதராட்டிரன் தன் தம்பிமக்களான பாண்டவரிடத்தும்
அன்புகொண்டு நடந்துவந்தானாதலால், அவனை 'நீதி யமைதருதந்தை'
என்றார்;   அன்றி, ராஜநீதியில் தவறாது நடத்தலால் அவ்வாறு கூறினா
ரென்றலு மொன்று.  இனி, நீதி அமைதரு - நியாயம் அடங்கிவிடப்பெற்ற
[நீதியொழிந்த] என்றலுமொன்று.  அத்திருதராட்டிரனது தந்தையாகிய
விசித்திரவீரியனுக்கு மூத்தவனாதலால், வீடுமன் அவனுக்குப்
பெரியதந்தையாவன்.

     விதுரன் - அம்பிகையாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்து
வியாசனுக்குப் பிறந்தவன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும்
மிகவல்லவன்:  "ஞானகஞ்சுகவிதுரன்" என்று சிறப்பித்துக் கூறும்படி
தத்துவஜ்ஞாநம் அமையப்பெற்றவன்:  இவனை யமதருமராஜனது
அமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவனென்றும் நூல்கள் கூறும்.

     கன்னன் - கர்ணகுண்டலங்களோடு பிறந்தமைபற்றியது;  காதின்
வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்;  கர்ணம் - காது.
பாண்டவர்கள் தாயான குந்திதேவி கன்னிகையாயிருந்தபொழுது தனக்குத்
துருவாசமுனிவ ருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறிதற் பொருட்டுச்
சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து
அவளுக்கு அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன் இவன்;
இவனைப் பிறந்தபொழுதே பழிக்கு அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில்
வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது
தேர்ப்பாகனான அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக்
கொண்டுபோய்த் தன் மனைவியான ராதையுந்தானுமாக வசுசேன னென்று
பெயரிட்டு வளர்த்தான்.  இவனுக்கு கர்ணனென்ற பெயர், ஆகாசவாணி
யிட்டது.  "ஆதபன் இவனை யாரும் கன்னனென் றழைக்க என்றான்" எனக்
கிருட்டிணன் தூதுசருக்கத்து வருதல் காண்க.  பின்பு இவன்
துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு
அரசனாயினான்.