பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 195

எளிதில் வெல்லத்தக்க வகையென்று கூறினனென்க.  பகைவருடைய
செல்வத்தை எளிதிற் கவர்தற்குச் சிறந்த உபாயமாயிருத்தலால், 'பெருஞ்சூது'
என்றான்.  'புல்' என்ற அடைமொழி சூதின் இழிவை விளக்கும்.  புந்தி - புத்திஎன்பதன் மெலித்தல்.                                   (178)

26.-பாண்டவரைச் சூதில்வெல்லும்வகையைக் குறித்துத்
துரியோதனன் சகுனியை வினாவுதல்.

கோமக னெஞ்சு நாவுங்குளிர்ந்துபே ருவகை கூர்ந்து
மாமனைத் தவிசின் கண்ணேவருதியென் றிருத்திக் கொண்டு
பாமரு பனுவன் மாலைப்பாண்டவர் தம்மை நின்கைக்
காமரு சூதால் வெல்லுங்கருத்தெனக் குரைத்தி யென்றான்.

     (இ -ள்.) கோ மகன் - திருதராஷ்டிரராஜனது புதல்வனாகிய
துரியோதனன்,-நெஞ்சும் நாவும் குளிர்ந்து - (தனது) மனமும் நாக்கும்
குளிரப்பெற்று, பேர் உவகை கூர்ந்து - மிகவும் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெற்று,
மாமனை - (தனது) மாமனாகிய அந்தச் சகுனியை (நோக்கி), தவிசின் கண்ணே
வருதி - 'இந்த ஆசனத்திலே வருவாயாக,' என்று - என்று சொல்லி,
இருத்திக்கொண்டு - (தனது ஆசனத்தில் தன்னுடன் ஒருசேர) இருக்க
வைத்துக் கொண்டு,- 'பாமரு பனுவல் மாலை பாண்டவர் தம்மை-
(பாவலர்கள்பாடிய) பாட்டுக்களின் வடிவமாக அமைந்துள்ள பிரபந்தங்களாகிய
மாலைகளைச் சூடிய பாண்டவர்களை, நின் கை காமரு சூதால் வெல்லும் -
உனது கையா லாடுகிற அழகிய சூதாட்டத்தினாற் சயித்தற்கு உரிய, கருத்து -
ஆலோசனையை, எனக்கு-, உரைத்தி-சொல்வாய்.' என்றான் - என்றுகூறி
வேண்டினான்;(எ - று.)

    'பாண்டவர்களை வெல்வது எவ்வாறு?' என்று பெருங்
கவலைகொண்டிருந்த துரியோதனன், சூதாட்டத்தினாற் பாண்டவர்களை
வென்று விடலா மென்ற சகுனியின் வார்த்தையைக் கேட்டவுடனே
வெல்லும்வழி யேற்பட்டதனால் ஒருவாறு தேறி, தனக்கு அவனிடம் உண்டான
மகிழ்ச்சி தோன்ற அவனைத் தனது ஆசனத்தில் இருக்க வைத்துக்கொண்டு,
'நாம் எளிதில் வெல்லுதற்கு உரிய சூதை ஆடும்படி பாண்டவர்களைத்
தூண்டும் உபாயம் யாது?' என்று ஆலோசித்துக் கூறுமாறு அச்சகுனியையே
வேண்டின னென்க.  தான் இராசசூயயாகத்திற்குச் சென்றபோது
அங்குத்தருமபுத்திரனது செல்வச் சிறப்பைக் கண்டதனாலும், வீமன் முதலியோர்
தன்னைப்பரிகசித்ததனாலும், அதுமுதற் பொறாமையும் கோபமுங்கொண்டு
நெஞ்சுலர்ந்து நாக்கு வறள வருந்துகின்ற துரியோதனன், சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு, இனிமேல் அப்பாண்டவர்களை
வெல்லலாமென்ற எண்ணத்தினால் அக்கவலை சிறிதுமாற, நெஞ்சும் நாவுங்
குளிரப்பெற்றனனென்க.  நீயே சூதாடவேண்டுமென்பான் 'நின்கைச் சூது'
என்றும், சூதாட்டமே தனது வெற்றிக்குக் காரணமாகுமென்று நினைத்து,
'காமருசூது' என்றும் கூறினான்.