பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 196

    'குளிர்ந்து' என்ற சினைவினை, 'என்றான்' என்னும் முதலின் வினையைக்
கொண்டு முடிந்தது;  [நன் - வினை - 26.] காமர் - அழகு;  உ - சாரியை;
இனி, காம மருவி என்பதன் விகார மெனினுமாம்.                   (179)

27.- இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: சகுனி
தருமபுத்திரனைச் சூதாடுவிக்கும் உபாயங் கூறுதல்.
 

மன்னநின் செல்வக் கோயின் மண்டப மொன்று தேவர்
பொன்னுல கினுக்கு மில்லை யென்பதோர் பொற்பிற் றாகப்
பன்னுநூற் சிற்பங் குன்றாப் பஃறொழில் வினைஞர் தம்மால்
நன்னில விரிவுண் டாக நாளையே யியற்று விப்பாய்.

     (இ -ள்.)  மன்ன - (குருநாட்டுக்கு)  அரசனே! (நீ), - நின் செல்வம்
கோயில் - (உனது) செல்வச் சிறப்பையுடைய அரண்மனையில், - தேவர்
பொன் உலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று  ஆக -
தேவர்களுடைய சுவர்க்கலோகத்திலும் (இதனையொத்தது) இல்லையென்று
(கண்டவர்) சொல்லும்படியான ஒப்பற்ற அழகையுடையதாகுமாறு, மண்டபம்
ஒன்று - ஒரு மண்டபத்தை, சிற்பம் பன்னும் நூல் குன்றா பல்தொழில்
வினைஞர் தம்மால் - சிற்பத் தொழிலைக் கூறுஞ் சாஸ்திரங்களின்
முறைமைக்குச் சிறிதும் மாறுபடாத பலவகை வேலைத்திறத்தில் வல்லவர்களான
தொழிலாளிகளைக் கொண்டு, நல் நிலம் விரிவு உண்டாக நாளையே
இயற்றுவிப்பாய் - மிக்க இடத்தின் பரப்பு அமையும்படி [மிகப் பெரியதாக]
விரைவிற் செய்விப்பாய்; (எ - று.)

     'தேவர்' என்பதை முதல்வேற்றுமையாகக் கொண்டு 'என்பது'
என்றதனோடு இயைத்து, தேவர்களும் இம்மண்டபத்தைக் கண்டு நமது
சுவர்க்கலோகத்திலும் இதைப் போன்ற மண்டபம் இல்லையென்று
கூறும்படியாக என்று உரை கூறுவாருமுளர்.  நூல்பன்னு சிற்பம் என்று
கூட்டியுரைப்பினுமாம்.  சில்பம் - வேலைத்திறம்.  தேவலோகத்திலுள்ள யாவும்
பொன்னாயிருக்குமென்பது நூல்துணிபாதலால், அவ்வுலகம் பொன்னுலகு
எனப்படும்.  பொன்னுலகினுக்கு - உருபுமயக்கம்.  உம்மை-உயர்வு சிறப்பு.
பொற்பிற்று - ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்.
பல+தொழில்=பஃறொழில்; பலவென்பது பிறவர அகர மேக, பின்பு
தனிக்குறிலின்பின் நின்ற நிலைமொழியீற்று லகரம் அல்வழியில் தகரம்வர
ஆய்தமாகத் திரிந்தது; [நன் - உயிர் - 20: மெய்-25.] இது, ஆய்தக்குறுக்கம்;
[நன்-எழுத்து-42.] மாத்திரை - கால்; [நன்-எழுத்து - 44.] நாளை -
எதிர்காலங் குறிப்பதோரிடைச்சொல்; ஏ - பிரிநிலை.            (180)

28. மண்டபங் காண வெம்முன் வருகவென் றழைத்து வந்தாற்
கண்டுகண் களித்து மற்றக்காவல ரிருந்த போதிற்
புண்டர விசால நெற்றிப் புரவலபொழுது போக
அண்டரும் விரும்பும் வன்சூதாடுதும் வருக வென்பேம்.