(இ -ள்.) (மண்டபம் கட்டிமுடித்தபின்பு), "மண்டபம் காண - (யான் புதிதாகக் கட்டுவித்த) மண்டபத்தைக் காணுமாறு, எம்முன் - எமது தமையனான தருமபுத்திரன், வருக-வரவேண்டும், என்று - என்று சொல்லி, அழைத்து வந்தால் - (தூதர்கள் மூலமாக நீ அவனை இவ்வூர்க்கு) அழைத்துக்கொண்டு வந்தால்,-அக்காவலர் - (அவ்வாறே மண்டபத்தைக் காணவேண்டுமென்று வரும்) அந்தப் பாண்டவர்கள், கண்டு களித்து இருந்த போதில் - (மண்டபத்தைத் தமது) கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்குஞ் சமயத்தில்,-'புண்டரம் விசாலம் நெற்றி புரவல - புண்டரமணிந்த விசாலமான - நெற்றியையுடைய அரசனே! அண்டரும் விரும்பும் வல் சூது - தேவர்களும் (ஆடுதற்கு) விரும்புகிற வலிய சூதாட்டத்தை, பொழுதுபோக ஆடுதும் - பொழுது போக்காக ஆடுவோம்; வருக - (நீ) வருவாயாக,' என்பேம் - என்று (தருமனை நோக்கிச்) சொல்வோம்; (எ - று.)-மற்று - அசை. பாண்டவர்களுள் மூத்தவனாய்ப் பிரதானனாயிருத்தல்பற்றி, 'எம்முன் வருக' என்று அழைக்க வேண்டுவதாயிற்று. அவ்வொருவனை அழைக்கவே, அவன் தம்பியரான மற்றை நால்வரையும் அழைத்தலும் அடங்கும். 'எம்முன்' என்ற சொல் - மற்றவர்களையும் குறிப்பது, உபலட்சணத்தின் பாற்படும்; [உபலட்சணமாவது - ஒருசொல் தன் இனத்தையும் காட்டுவது.] பாண்டவரையும், 'காவலர்' என்றது - அரச குலத்தில் பிறந்ததனா லென்க. மிக்க அழகுடைய பொருளைக் கண்களாற் காணும்போது அங்ஙனம் காணுதல்பற்றி மனத்தில் நிகழும் மிக்க மகிழ்ச்சியை உபசார வழக்காக அக்கண்களின்மே லேற்றி, 'கண்டு கண்களித்து' என்றார். புண்டரம் - நெற்றியில் குறுக்காகவேனும் நேராகவேனும் இடுங்குறி; குறுக்காக இடுங் குறி - திர்யக்புண்ட்ரம் எனவும், நேராக இடுங்குறி - ஊர்த்துவபுண்டரம் எனவும் சொல்லப்படும். இனி, புண்ட்டரம் - இரேகை என்றுகொண்டு, உத்தமவிலக்கணமாகிய நல்வரைகளையுடைய பரந்த நெற்றி என்றும் உரை கூறலாம். ஒவ்வொருவரும் தாம் செய்யுந் தொழிலைப் பாராட்டிக் கூறுதல் இயல்பு ஆதலாலும், தருமபுத்திரனுக்கு அதன்மீது விருப்புண்டாக்க வேண்டியிருத்தலாலும், சகுனி 'அண்டரும்விரும்பும் வன் சூது' என்று அவ்வாட்டத்தைக் கொண்டாடிக் கூறுவோ மென்றான். ஆடுதும்-தருமனை உளப்படுத்திய தன்மைப்பன்மை; இதில் 'தும்' என்ற விகுதி - எதிர் காலங்காட்டிற்று [நன் - பத - 18.] என்பேம் - துரியோதனன் முதலியோரைக் கூட்டிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. அழைத்து-நாம் அழைத்து [அழைக்க], வந்தால்-(அவன்) வந்தால் என்றும் பொருள் கொள்ளலாம். (181) | 29. | அதிர்முர சுயர்த்த கோவுமையெனத் துணியும் பின்னை மதிமரு ளியற்கைத் தாகுமாயவெஞ் சூது தன்னால் விதியெனப் பொருது வாழ்வுமேதகு மரசுந் தங்கள் பதிமுதற் பலவுந் தோற்கும்படிசெகுத் திடுவ லென்றான். |
|