பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 198

     (இ -ள்.) (சூதாட அழைத்தால்),-அதிர் முரசு உயர்த்த கோவும் -
ஒலிக்கின்ற முரச மெழுதிய கொடியை உயர எடுத்துள்ள அரசனாகிய
தருமபுத்திரனும், ஐ என துணியும்-'அழகியது' என்று சொல்லி (அங்கீகரித்து)ச்
சூதாடத்துணிவான்; பின்னை - பின்பு,-(நான்),-மதி மருள் இயற்கைத்து ஆகும்
மாயம் வெம்சூது தன்னால்-புத்தி மயங்குதற்குக் காரணமான இயல்பை
உடையதாகிய வஞ்சனைக்குணமுள்ள கொடிய சூதாட்டத்தினால், விதி என
பொருது - ஊழ்வினையென்று சொல்லும்படி போராடி,- தங்கள் -
அப்பாண்டவர்களுடைய, வாழ்வும்-வாழ்வுக்குக் காரணமான செல்வத்தையும்,
மேதகும் அரசும் - மேலான அரசாட்சியையும், பதி முதல் பலவும் - தேசம்
முதலாகிய பலபொருள்களையும், தோற்கும்படி-, செகுத்திடுவல் -
(அப்பாண்டவர்களை) அழித்து விடுவேன், என்றான் - என்று கூறினான்; 
(எ- று.)

    ஊழ்வினையைச் சூதுக்கு உவமையாக்கியது, 'தவறாது தருமனை
யகப்படுத்தி வருத்தப் போவதனா லென்க. ஊழ் மிக்கவலியுள்ளதாவதை
"ஊழிற் பெருவலி யாவுள" என்ற திருக்குறளினாலும் அறிக.  அதிர்-
முரசத்துக்கு இயற்கையடைமொழி.  முரசு - அதன் வடிவமெழுதிய கொடிக்குத்
தானியாகுபெயர்.  தருமன் மங்கலகரமாகவும் வெற்றிக்கு அறிகுறியாகவும்
முரசத்தைக் கொடியிற் கொண்டனன் போலும்.  ஐயெனல் - அங்கீகார
வார்த்தை.  அரசு -அரசாளுந்தன்மை.  செகுத்திடுவல் - வெல்வேன்;
தன்மையொருமைவினைமுற்று.  கோவும் துணியும் - செய்யுமென் முற்று,
ஆண்பாலுக்கு வந்தது.                                 (182)

30.-சகுனியின் வார்த்தைக்குத் துரியோதனன் மகிழ்தல்.

இன்னதே கரும மென்றென்றிளைஞரும் விழைத்து சொன்னார்
அன்னதே கரும மாக வவர்வழியொழுகு நீரான்
தன்னதே யாகு மிந்தத்தலமெனுங் கருத்தான் மாமன்
சொன்னதே துணிந்து மார்புந்தோள்களும் பூரித் திட்டான்.

     (இ -ள்.) இளைஞரும் - (அருகிலிருந்த துரியோதனனது)
தம்பிமார்களும், இன்னதே கருமம் என்று என்று விழைந்து சொன்னார் -
'(சகுனி கூறுகிற) இதுவே (இப்பொழுது நாம் செய்யத்தக்க) காரியம்' என்று
பலமுறை விரும்பிச் சொன்னார்கள்; அவர்வழி யொழுகும் நீரான்-
அத்தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்குந் தன்மையுடையவனாகிய
துரியோதனனும்,-அன்னதே கருமம் ஆக - அதனையே தான்
செய்தொழிலாகக் கொண்டால், இந்த தலம் தன்னதே ஆகும் -
இவ்வுலகமுழுவதும் தன்னுடையதேயாய்விடும், எனும் கருத்தால் - என்னும்
எண்ணத்தினால், மாமன் சொன்னதே துணிந்து - மாமனாகிய சகுனி கூறிய
உபாயத்தையே நன்றென்று கடைப்பிடித்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்
- (மிக்க மகிழ்ச்சியினால்) மார்பும் தோள்களும் பூரிக்கப் பெற்றான்; (எ - று.)

     என்று என்று சொன்னார் - தனித்தனி கூறினா ரென்றுமாம்.
'இளைஞர்வழி யொழுகும் நீரான்' என்றது, துரியோதனன் தான்