பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 199

சிறிதும் பாரபுத்தியில்லாமல் அற்பபுத்தியையுடைய சிறுவர்களாகிய
தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்கின்றவ னென இகழ்ந்தவாறு.  நீரான் -
நீர்மையென்ற பண்புப்பெயரின் விகாரமான நீர்-பகுதி.  துரியோதனன்
'இனிச்சூதாடி அவர்களது இராச்சியத்தைக் கவர்வது திண்ணம்' என்று
துணிவுகொண்டு, பெற்றவன் போலவே மகிழ்ந்து பூரித்தன னென்க.
ஏகாரங்கள் - பிரிநிலைப் பொருளன.  நீரான் மார்பும் தோள்களும்
பூரித்திட்டான் - உயர்திணை தொடர்ந்த சினைப்பெயர்கள் உயர்திணை
முடிபையே கொண்ட திணைவழுவமைதி; [நன் - பொது - 26.] பூரித்தல் -
பருத்தல்.                                           (183)

31.-துரியோதனன்சகுனியினுபாயத்தை விதுரனிடம் சொல்ல,
அன்னான் மாறுகூறல்.

வில்லினா லுயர்ந்த வென்றிவிதுரனை நோக்கிக் கொற்ற
மல்லினா லுயர்ந்தபொற்றோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினா லுபாயஞ் செய்ய மாதுலனுரைத்த தெல்லாஞ்
சொல்லினா னவனுங் கேட்டுச்சொல்லெதிர் சொல்ல லுற்றான்.

     (இ -ள்.) கொற்றம் - வெற்றியை யுடையவையும், மல்லினால் உயர்ந்த -
மற்போரினால் மேன்மைபெற்று விளங்குகின்றவையுமாகிய, பொன் தோள் -
அழகிய தோள்களில், வலம்புரி மாலை - நஞ்சாவட்டைப் பூமாலையை
யணிந்த, வேந்தன் - துரியோதனராஜன்,- வில்லினால் உயர்ந்த வென்றி
விதுரனை-வில்வித்தையால் மேம்பாடடைந்தவனும் வெற்றியை
யுடையவனுமாகிய விதுரனை, நோக்கி - பார்த்து,- வல்லினால் உபாயம்
செய்ய-சூதாட்டத்தினால் (தருமபுத்திரனது இராச்சியத்தைத்) தந்திரமாகக்
கவரும்படி, மாதுலன் உரைத்தது எல்லாம் - (தன்) மாமனாகிய சகுனி
சொன்னது முழுவதையும், சொல்லினான்-; அவனும் - அவ்விதுரனும், கேட்டு-,
சொல் எதிர் சொல்லல் உற்றான்-(அத்துரியோதனனது) வார்த்தைக்கு
எதிர்மொழி கூறத் தொடங்கினான்; (எ - று.)

     "வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை வெற்றி
கொள்ளுமாறுண்டோ" என்னும்படி விதுரன் வில் தொழிலில் மிகத்
தேர்ந்தவனாதலால், 'வில்லினாலுயர்ந்த வென்றி விதுரன்' என்றார்.
"வில்விதுரன்" என்று பலவிடங்களிலும் பயிலும்.  அரசர்கட்கு உரிய
போர்த்தொழிலைக் கைவிட்டு இழி தொழிலாகிய மாயச்சூதில் மனம் வைத்த
துரியோதனனை 'கொற்றமல்லினாலுயர்ந்த பொற்றோள் வேந்தன்' என்றது -
பிறகுறிப்பின்பாற்பட்ட இகழ்ச்சி யென்னலாம்.  வலம்புரி - வலப்பக்கமான
முறுக்கை யுடைய இதழ்களை யுடையது என நஞ்சாவட்டைக்குக் காரணக்குறி.
நஞ்சாவட்டை-துரியோதனனுக்கு அடையாளப் பூமாலையாம்.  வல் -
சூதாடுகருவி: அதனாலாகிய ஆட்டத்துக்கு ஆகுபெயர்.  மாதுலன் -
தாயினுடன் பிறந்தவனெனப்பொருள்படும்.  உரைத்ததெல்லாம் -
ஒருமைப்பன்மைமயக்கம்.  'சொல்லெதிர் சொல்லலுற்றான்' என்ற தொடர் -
இரட்டுற