துரியோதனன் சூழ்ச்சியால் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் வசித்த பாண்டவர்கள் அங்கு நின்று தப்பிச் சென்று திரௌபதியை மணந்து பிறகு திருதராஷ்டிரன் தூது விடுத்து அழைக்க, அஸ்திநபுரஞ் சேர்ந்தனர். திருதராஷ்டிரன், மந்திரிகள் முதலானாரோடு ஆலோசித்துத் தருமபுத்திரனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்த பின்பு, அப்பெரிய தந்தையின் கட்டளைப்படி பாண்டவர் காண்டவப் பிரத்தமென்னுங் கடுங்காட்டிற் சேர்ந்தனர். அங்குக் கண்ணபிரான் இந்திரனோடு விசுவகர்மனை வருவிக்க, அங்ஙனம் வந்த இந்திரனது கட்டளைப்படி அத் தெய்வத்தச்சன் சிறந்ததொரு நகரத்தை நிருமிக்க, அதற்குக் கண்ணன் இந்திரப்பிரத்தமென்று பெயரிட்டுப் பாண்டவரை அதிற் குடியேற்றி யருளிச் சென்றனன். இங்ஙனம் நிகழ, ஒருகால் தீர்த்தயாத்திரை செய்யுமாறு அருச்சுனன் புறப்பட்டுப் பூப்பிரதக்ஷிண முறையால் துவாரகை சேர்ந்து, கண்ணபிரானது தங்கையான சுபத்திரையைத் தந்திரமாக மணஞ் செய்துகொண்டு கண்ணபிரானுடனே இந்திரப் பிரத்தத்துக்கு வந்து சேர்ந்தனன். பின்பு சுபத்திரை வயிற்றில் அபிமந்யுவும், திரௌபதி வயிற்றிற் பஞ்சபாண்டவர்க்கு உபபாண்டவ ரைவரும் பிறந்தார்கள். இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும் உல்லாசமாக வசித்திருக்கையில், ஒருநாள், அக்கினி பகவான், அந்தண வடிவங்கொண்டு வந்து 'எனக்கு மிகப் பசிக்கின்றது: உணவிடுக' என்று வேண்ட, அவ்விருவரும் 'நீ வேண்டியபடி உணவிடுவோம்' என்று வாக்கு தத்தஞ் செய்ய, உடனே தீக்கடவுள் நிஜ ரூபங்கொண்டு 'இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற காண்டவ வனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு விருந்திட வேண்டும்' என்ன, அவர்கள் இசைந்து 'நீ இதனைப் புசி' என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டிய தேரையும், குரங்குவடிவ மெழுதிய துவசத்தையும் காண்டீவமென்னும் வில்லையும், இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக் காண்டவ வனத்திற் பற்றி யெரிகையில், அவ்வனத்தினின்று ஓடுகிற பிராணிகளை யெல்லாம் அருச்சுனன் அம்பெய்து கொன்று அத்தழலில் விழுத்தி வந்தனன். காண்டவவனம் தீப்பற்றியெரிகிற செய்தியை யுணர்ந்த தேவேந்திரன் அத்தீயை யவிக்கும்படி பல மேகங்களை யேவ, அம்மேகங்கள் வந்து பொழிந்த சோனைமாரியில் ஒருதுளியும் தீயின்மேல் விழுந்திடா வண்ணம் அருச்சுனன் சரகூடங்கட்டித் தடுத்துவிட்டான். பின்பு இந்திரன் தேவசேனையுடனே போர் செய்ய, அருச்சுனன் அனைவரையும் வென்று அவ்விந்திரனோடு போர் தொடங்கு மளவில், ஆகாயவாணி சொன்னதனால் இந்திரன் போரை நிறுத்திச் சென்றனன். அக்கினி அவ்வனம் முழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் செல்ல, அவ்விருவரும் இந்திரப்பிரத்தநகரஞ் சேர்ந்தனர். அக் |