பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 200

மொழிதலென்னும் உத்தியால், சொல்லுக்கு மாறாக உத்தரஞ்சொல்லினா
னெனவுமாம்.  எதிர் சொல்லுதல்-மறுமொழி கூறுதல்;  மறுமொழி - விடை,
மாறானமொழி.                                            (184)

32.-மூன்றுகவிகள் - விதுரன் வார்த்தை.

வையமு மரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே யாயின்
பொய்யடர் சூது கொண்டு புன்மையிற் கவர வேண்டாம்
ஐயநின் றந்தை யோலை யைவருக் கெழுதி விட்டல்
மெய்யுற மறுத்துச் சொல்லார் வேண்டின தருவ ரன்றே.

இதுமுதல் ஐந்து கவிகள் - ஒருதொடர். 

     (இ - ள்.)  ஐய - ஐயனே! வையமும் - பூமியையும், அரசும் -
அரசாட்சியையும், வாழ்வும் - செல்வவாழ்க்கையையும், வாங்குகை -
(தருமபுத்திரனிடத்திலிருந்து) கவர்ந்து கொள்வது, கருத்து ஆயின் - (உனது)
எண்ணமானால், பொய் அடர் சூதுகொண்டு - பொய்ம்மைமிக்க
சூதாட்டத்தினால், புன்மையின் கவரவேண்டாம் - தாழ்ந்த வழியாற்
கவர்ந்துகொள்ளவேண்டாம்;  (மற்றுக் கவர்தற்குத் தக்க உபாயம்
எதுவென்றால்)-, நின் தந்தை - உனது தந்தையான திருதராட்டிரன், ஐவருக்கு
ஓலை எழுதி விட்டால் - (வையமும் அரசும் வாழ்வும் உனக்கே உரியனவாகத்
தந்திடுமாறு) பஞ்சபாண்டவர்கட்குத் திருமுகம் எழுதியனுப்பினால், மெய் உற -
உண்மையாக, மறுத்து சொல்லார் - (மாட்டோமென்று) மாறு கூறாதவர்களாய்,
வேண்டின தருவர் - (நீ) விரும்பியவை யெல்லாவற்றையும் தந்திடுவார்கள்  (எ
- று.)- அன்றே ஈற்றசை;  தேற்றமுமாம்:  அப்பொழுதே யென்றுங் கூறலாம். 

     "சூது....வெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்"
என்பவாதலால், 'பொய்யடர்சூது' எனப்பட்டது.  புன்மையின் கவர்தல் -
வழியல்லாத வழியாற் பெறுதல்.  மைந்தன் முறையாகின்ற துரியோதனனை
விதுரம் 'ஐய' என்று விளித்தது, அன்புபற்றிய மரபுவழுவமைதி.  வேண்டின -
பலவின்பாற்பெயர்.                                          (185)
 

33.தந்தைதன் னேவ லாலே தருமனுந் தம்பி மாரும்
இந்தமண் ணாடல் கைவிட் டெரிகெழு கானஞ் சேர்வர் 
முந்துற நுமதே யாகு முழுதும்வாழ் வெழுதுஞ் செம்பூம்
பைந்தொடை யரசர் கேட்டாற் பாவமும் பழியு மாகா.

     (இ - ள்.) தந்தைதன் ஏவலாலே - (தமக்குப்பெரிய) தந்தையாகிய
திருதராட்டிரனது கட்டளையினால், தருமனும் தம்பிமாரும் -, இந்த மண்
ஆடல் கைவிட்டு-இப்பூமியை அரசாளுதலை விட்டிட்டு, எரி கெழு கானம்
சேர்வர் - தீ நிரம்பிய காட்டைச் சேர்வர்:  வாழ்வு முழுதும் முந்துற நுமதே
ஆகும் - (அப்பாண்டவர்களது) வாழ்க்கைகளெல்லாம் விரைவாக
உங்களுடையதேயாகி விடும்;  (ஆதலால்), எழுதும்-(சூதைவிட்டுத் தந்தையைக்
கொண்டு ஓலை) எழுதுவியுங்கள்; செம் பூ பைந்தொடை அரசர் கேட்டால் -
(நீங்கள் அவ்வாறு எழுதுவித்து இராச்சியங்கொள்வதை) அழகிய