பூக்களினால் தொடுக்கப்பட்ட புதிய மாலைகளை யணிந்த அரசர்கள் கேட்பாராயின், பாவமும் பழியும் ஆகா - பாவமும் பழியும் நேருமென்று கொள்ளப்படமாட்டா; (எ - று.) இராமபிரான் போலவே பாண்டவர்களும் தங்கட்கு உரிய பொருளை யிழந்தாயினும் தந்தை சொல்லைப் பாதுகாக்குந் தன்மையுடையாரென்பது, முன்னிரண்டடியால் விளங்கிற்று. இங்ஙனம் கூறியதனால், தருமபுத்திரனுக்கு எழுதவேண்டிய திருமுகத்தில் பாண்டவர்கள் நாட்டைவிடுதலும் காட்டுக்குச் செல்லுதலும் குறிக்கவேண்டிய பொருள்களெனக் குறிப்பித்தபடியாம். தருமபுத்திரன் மூத்தவனும் இயற்கையிற் பல நற்குணங்களை யுடையவனுமாயிருத்தல்பற்றி, இராச்சியத்தைக் கொடுத்துவிட்டு அந்நாட்டிலேயே யிருந்தால் ஒருகால் ஜனங்கள் அத்தருமன்மீது அன்புகொண்டு அவனையே அரசனாகப் பாராட்டக்கூடு மாதலால், அதற்குச் சிறிதும் இடமில்லாதபடி நாட்டைத்துறந்து காட்டுக்குச் செல்லுதல் அவசியம் வேண்டுவதாயிற்று. 'முழுதும்' என்பதற்கு - உங்கள் நாட்டோடு பாண்டவர்நாடுஞ் சேர்ந்து எல்லாம் என்றுபொருள் கூறலாம். இனி, எழுதும் பைந்தொடை, செம்பூந்தொடை எனத் தனித்தனியியைத்து, எழுதும் - சித்திரவேலை செய்யப்பட்ட, பைந்தொடை - பசும்பொன்னாற்செய்த ஆரங்களையும், செம்பூந்தொடை - அழகிய மலர்களினால் தொடுக்கப்பட்ட மாலைகளையும் அணிந்த அரசரெனவும்; கவிகளால் எழுதப்படுகிற அழகிய மலர்மாலை போலச் சிறந்த பாமாலையையுடைய அரசரெனவும் பொருள் கூறினும் பொருந்தும். சூதாடிக்கவர்தலினும் தந்தையின் ஓலை மூலமாகக் கவர்வது, குற்றமற்றவழி யென்பது, விதுரன் கருத்து. கைவிட்டு, கை - தமிழுபசருக்கம். முழுது - எஞ்சாமைப்பொருள்பட வருவதோர் உரிச்சொல்: "முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே" என்பது, தொல்காப்பியம். 'ஆகா' - ஆகாது என்பதன் விகாரம். (186) | 34. | தீதினால் வரித்து நெஞ்சந் தீயவ ராடு மாயச் சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழு மன்று போதினான் முகனு மாலும் புரிசடை யவனுங் கேள்வி யாதிநான் மறையு முள்ள வளவுமிவ் வசைய றாதே. |
(இ - ள்.) நெஞ்சம் தீயவர் -மனத்திற் குற்றமுள்ளவர்களாகிய கீழோர், தீதினால் - (தம்முடைய) இயற்கைத் தீய குணத்தால், வரித்து - விரும்பி, ஆடும் - ஆடுகின்ற, மாயம் சூதினால்-வஞ்சனையையுடைய சூதாட்டத்தினால், வென்று-(நீங்கள் பாண்டவர்களைச்) சயித்து, கொள்கை - (அவர்களது இராச்சியத்தைப்) பறித்துக் கொள்வது, தோற்றமும் புகழும் அன்று - பெருமைக்கும் புகழுக்கும் காரண மாகாது; (அன்றியும்),- போதில் நான்முகனும் - தாமரை மலரில்வசிக்கின்ற பிரமனும், மாலும் - திருமாலும், புரி சடையவனும் - திரித்துவிட்ட சடையையுடையவனான சிவபிரானும் |