பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 203

இவ்விழிதொழிலினால் நேர்ந்த பழிப்பேயல்லாமல், புகழ்கொலோ-
கீர்த்தியாமோ? (எ - று.)-அம்மா-அசைநிலை.  பட்சபாதஞ் செய்தலின்
கொடுமையைக் குறித்து வியந்தவாறுமாம்.

     பாண்டவரை வருவித்துச் சூதாடிவென்றுஅவ்வழியில்
அவர்களிராச்சியத்தை நமக்கு உரியதாக்குதல் பழிப்பில்லாத நேர்வழியாகுமே
யன்றி, எங்களிருதிறத்தாரிடத்திலும் ஒத்த அன்பினனாயிருக்கவேண்டிய
தந்தையாகிய திருதராட்டிரனைக்கொண்டு ஒரு காரணமுமின்றி இராச்சியத்தைக்
கொடுத்துவிடும்படி பாண்டவர்க்கு ஓலையெழுதுவித்து அவர்களது
இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளுதல் 'திருதராட்டிரன் பட்சபாதமாக
ஒருதிறத்துப் புதல்வரிடத்தினின்று இராச்சியத்தைக் கவர்ந்து மற்றொருதிறத்துப்
புதல்வர்க்குக் கொடுத்தான்' என்ற பெரும்பழிக்குக் காரணமாய் நிற்கு மாதலால்,
அவ்வழி சிறந்ததாகாது எனத் துரியோதனன் விதுரன்மொழியைமறுத்து
இகழ்ந்து கூறியவாறு.  திருதராட்டிரன் தன்மக்களாகிய
துரியோதனாதியரிடத்துப்போலவே மிக்க இளமையிலேயே தமது தந்தையை
யிழந்தவர்களாகிய தன் தம்பி மக்களான பாண்டவரிடத்தும் ஒத்த
அன்பினனாதலால், 'ஒன்றிய கேண்மைத் தந்தை' எனப்பட்டான்.
துரியோதனாதியர் பாண்டவர் என்ற இரு திறத்தாரையும் ஒரு நிகராகக்கருதாது
ஒருதிறத்தாருடைய அரச வாழ்க்கையைப் பறித்து மற்றொரு திறத்தார்க்குக்
கொடுத்தல் ஒருபுடைவாரமாதல் காண்க.  ஒருபுடை வாரம்-பட்சபாதம்.

     எரி - கோபத்திற்கு இலக்கணை. வல்திறல் - ஒருபொருட்பன் மொழி.
வாழ்வு - காரியவாகுபெயர்.  'எமக்கு' - தம்பியரையுங் கூட்டிய
உளப்பாட்டுத்தன்மைப்பன்மை.  புகழ்கொல்ஓ, கொல் -
வினாப்பொருளையுணர்த் தியதனால், ஓகாரம் - அசைநிலை.    
(188)

36.நினக்கிது தொழிலா லென்று நேயமு மவர்கண் மேலே
எனக்குயிர்த் தந்தை நீயென் றியானுனை மகிழ்ந்து காண்பன்
உனக்குமுன் கிளைக்கு நாளு முண்டியும் வாழ்வு மிங்கே
மனக்கருத் தங்கே யென்றான் மாசுணத் துவசன் மாதோ.

     (இ - ள்.) நினக்கு - உனக்கு,  இது -இவ்வாறு பட்சபாதமாகச்
சொல்வதே, தொழில் - தொழிலாகும்;  என்றும் - எப்பொழுதும், நேயமும் -
அன்பும், அவர்கள்மேலே-அப்பாண்டவர்க ளிடத்திலே யாகும்;  யான் -, நீ
எனக்கு உயிர் தந்தை என்று - 'நீ எனக்கு உயிர்க்கு ஒப்பான தந்தையாவாய்'
என்று நினைத்து,-உனை - உன்னை, மகிழ்ந்து காண்பன் - மகிழ்ச்சி பாராட்டி
(அன்போடு) நோக்குவேன்; (இவ்வாறு நான் நின்னிடத்து
அன்புகொண்டிருக்கவும்),-உனக்கும்-, உன் கிளைக்கும் - உன்னுடைய
சுற்றத்தார்கட்கும், நாளும் - நாள்தோறும், உண்டியும் - உணவும், வாழ்வும் -
இனிதாக வாழ்தலும், இங்கே - இவ்விடத்தில்: மனம் கருத்து - மனத்திற்
கொள்ளும் (அன்பான) எண்ணமோ, அங்கே - அப்பாண்டவர்க
ளிடத்திலேயாகும், என்றான் - என்று கூறினான்