| (யாவனெனில்)-, மாசுணம் துவசன் - பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனன்; (எ - று) மாது, ஓ - ஈற்றசைகள். 'நீ எங்களிடத்திலே உணவும் வாழ்க்கையும் பெற்றிருந்தும், எங்கட்கு அநுகூலமாகப் பேசாமல் எங்களைப் பழித்தும் எதிரிகளான பாண்டவர்களைப் புகழ்ந்தும், நாங்கள் தொடங்கிய காரியத்தை நிறைவேறவொட்டாது தடைசெய்து உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைத்துப் பேசுவது எமக்குத் தந்தையாகிய உனக்குச் சிறிதும் தகுதியன்று' எனத் துரியோதனன் விதுரனைப் பழித்துக் கூறியவாறு விதுரன் இராச்சியத்தைச் சூதாட்டத்தினாற் கைப்பற்றலாகாதென்று தடுத்துக்கூறியதோடு நில்லாமல் இராச்சியத்தை வேறு வகையாகக் கைக்கொள்ளுமாறு உபாயங்கூறியிருக்கவும், துரியோதனன் அவனை இவ்வாறு பழித்துக்கூறியது, தான் செய்யத்தொடங்கிய காரியத்தை மேன்மேலும் ஊக்கத்தோடு செய்து முடிக்கவொட்டாதபடி தடுத்தற்கு விதுரன் ஒரு வியாகுலமாகக் கூறியதேயன்றித் தன்னிடத்து உள்ளூர அன்பினாற் கூறியதனதென்று அதனைக் கருதியதனா லென்க. இங்குத் துரியோதனனை 'மாகிணத்துவசன்' என்றது - பாம்புக்கு உதவும் பால் நஞ்செயாவதுபோலத் துரியோதனனுக்கு விதுரன் செய்த உபதேசம் அவ்வளவும் நல்லறிவு உண்டாதற்குக் காரணமாகாமல் கோபத்தினால் தீயறிவு உண்டாதற்கே காரணமாயிற்று என்றவாறு. என்றும், நாளும் - உம்மைகள் முற்றுப்பொருளன. நேயமும், உம்மை - எச்சப்பொருளது. மற்றவை - எண்ணும்பொருளன. கிளை - உறவினர்க்கு உவமையாகுபெயர். உண்ண - உண்ணப்படுவது; உண் - து - சாதியை, இ - செயப்படுபொருள்விகுதி. 37.- இதுமுதல் நான்குகவிகள் - ஒருதொடர்; விதுரன் சினத்தோடு துரியோதனனுக்கு நல்லறிவு கூறுதல். | மைந்தனங் குரைத்த மாற்ற மனத்தினை யீரப் பின்னும் வெந்திறல் விதுரனுற்று விளம்புவ னென்ப மாதோ புந்தியின் மறுவி லாதோய் புதல்வரி லொருசா ரன்பு தந்தையர்க் கில்லை யென்றா யானுமத் தந்தை யன்றோ. |
(இ - ள்.) அங்கு - அப்பொழுது, மைந்தன் தனக்கு மைந்தன் முறையாகின்ற துரியோதனன் உரைத்த சொல்லிய, மாற்றம் - மாறான வார்த்தை, மனத்தினை ஈர - (தன்) மனத்தை வருத்த,-வெம் திறல் விதுரன் - மிக்க வலிமையுள்ளவனாகிய விதுரன், உற்று - மனம்பொருந்தி, பின்னும் விளம்புவன் - மற்றும் கூறுவானாயினான்;- புந்தியில் மறு இலாதோய்-மனத்திற் குற்றமற்றவனான துரியோதனனே! (நீ),-'தந்தையர்க்கு-தகப்பன் முறையிலிருப்பவர்க்கு, புதல்வரில் - (இருதிறத்துப்) புதல்வர்களுள், ஒருசார் - ஒருதிறத்தாரிடத்து, அன்பு-, இல்லை-, என்றாய் - என்று சொன்னாய்; யானும் - நானும், அ தந்தை அன்றோ - அவ்வாறேநும் (இரு திறத்தார்க்கும்) தந்தை முறையாகுபவ னன்றோ! (எ - று.) |