வாழலாம்' என்பது பழமொழி. உததி - நீர்தங்குமிடம் எனக் காரணப்பொருள்படும்: அது - 'நீர்' என முன்வந்ததனால் இங்குக் காரணங்கருதாது பெயர்மாத்திரமாய் நின்றது; "அடியளந்தான் தாஅயதெல்லாம்" என்றவிடத்துப் போல. பூமியைச்சூழ்ந்துள்ள கடலை, நிலமகளுடுத்த ஆடையாக உருவகப்படுத்திக் கூறுதல், கவிசமயம். பாங்கு - நண்புரிமை. இல்வாய்-வாயில் என இலக்கணப்போலி. (191) | 39. | உங்களி னவரு நீரு முளம்பிரிந் தெதிர்த்தீ ரானால் தங்களி னெதிர்ந்தா ரம்மா குருகுலத் தலைவ ரென்னாப் பொங்களி நிகழுங் கஞ்சப் புரவல னொழிவு கண்ட திங்களி னுயர்ச்சி போலத் தெவ்வருந் திகழ்வ ரன்றே. |
(இ - ள்.) அவரும் - அப்பாண்டவர்களும், நீரும் - நீங்களும், உளம் பிரிந்து மனம்வேறுபட்டு, உங்களின் எதிர்த்தீர் ஆனால் - (குருகுலத்தவர்களாகிய) உங்களுள்ளே போர்புரிந்தீர்களானால், -தெவ்வரும்- (உங்களுடைய) பகைவர்களும்,- 'குருகுலம் தலைவர் - குருகுலத்தில் தோன்றிய அரசர்களாகிய பாண்டவர்களும் துரியோதனாதியர்களும், தங்களின் எதிர்ந்தார் - தங்களுள்ளே மாறுபாடுகொண்டு போர்புரியலானார்கள்: அம்மா - ஆச்சரியம்!' - என்னா - என்று சொல்லி,- பொங்கு அளி நிகழும்- களிப்புக்கொள்ளுகின்ற வண்டுகள் மொய்த்தற்கு இடமான, கஞ்சம்- தாமரைமலர்க்கு, புரவலன் - தலைவனாகிய சூரியனது, ஒழிவு - நீக்கத்தை, கண்ட-, திங்களின் - சந்திரனது, உயர்ச்சி போல-சிறந்த தோற்றம்போல, திகழ்வர் - விளங்குவார்கள்; (எ - று.)- அம்மா என்பது, மிக்க மனவொற்றுமையுடன் வாழவேண்டிய குருகுலவேந்தர் ஒற்றுமைகெட்டு மனம் மாறுபட்டுப் போர்க்கும் எழும் அதிசயத்தைப்பற்றிய வியப்பிடைச்சொல். சூரியனுக்குமுன்னே ஒளிமழுங்கிக்கிடந்தசந்திரன் அச்சூரியன் மறைந்த சமயத்தில் மிக்கஒளியுடன்விளங்கித் தோன்றுமாறுபோல, குருகுலத்தவராகிய நீங்கள் மிக்கமனவொற்றுமையுடனிருந்த காலத்து வலியடங்கி ஒடுங்கிக்கிடந்த பகையரசர்கள் நீங்கள் ஒற்றுமையின்றி மாறுபாடுகொண்டுபோர் புரிந்தால் 'இனி ஒற்றுமையிழந்த குருகுலத்தவரை எளிதில் வெல்லலாம்' என்ற கருத்தாற் செருக்குக்கொண்டு தலையெடுப்பர் என்று, ஒற்றுமையின்மையால் விளையுங் கேட்டை விளக்கியவாறு; உவமையணி. கஞ்சம்-நீரில் தோன்றுவது எனக்காரணப்பொருள்படும். கணவனைக்கண்டபோது முகமலர்ந்தும் பிரிந்த சமயத்தில் மனம் வருந்தி வாடியும் நிற்கும் பதிவிரதையான மனைவியைப்போல, சூரியனைக் காணுங் காலைவேளையில் மலர்ந்தும் சூரியன் காணப்படாமல்நிற்கும் இரவிலே குவிந்தும் நிற்பதால் தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக் கூறுதல் கவிமரபு. தெவ் - பகைமை; அதனையுடையவர் - தெவ்வர். (192) |