பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 209

     துரியோதனன் மகாவீரனாதலால் 'செழுந்திரு விரும்பும்மார்பன்'
எனப்பட்டான்.  உலகத்தில் அரசராய்த்தோன்றுகிறவர் யாவரும் காத்தல்
தொழிற்கடவுளான திருமாலின் அமிசமாவரென்ற நூல் துணிபுபற்றி,
ராஜராஜனான துரியோதனனை 'செழுந்திரு விரும்பும் மார்பன்' என்றதாகவுங்
கொள்ளலாம்.  'இகலரியேறு போல்வான்' என்ற தொடர், கீழ் 3-ஆஞ்
செய்யுளில் துரியோதனனைக் குறித்து நின்றது.  தொழும் தகை மௌலி
வேந்தன் - (தன்னைக்) கைகூப்பி வணங்கிய தன்மையையுடைய வணங்காமுடி
மன்னனான துரியோதனனது எனினுமாம்.  சூழ்ச்சியிற்கு - இன்சாரியை.
கொடுமை-மொழிகட்குப் பண்பாகுபெயர்.                       (195) 

43.-துரியோதனன், மண்டபங்கட்டச் சொல்லுதல்.

புரிவிலா மொழிவி தூரன் போகலும் புரிவி லொன்றுஞ்
சரிவிலா வஞ்ச மாயச் சகுனியுந் தம்பிமாரும்
விரிவிலா மனத்தோ டெண்ணும் விசாரமே விசார மாக
வரிவிலான் விரைவி னீண்டோர் மண்டபஞ் சமைக்கவென்றான்.

     (இ - ள்.) புரிவு இலா மொழிவிதூரன்-(தனக்கு) விருப்பமில்லாத
சொற்களைக்கூறிய விதுரன், போகலும் - (அவ்விடத்தை விட்டுச்)
சென்றவுடனே,- புரிவில் ஒன்றும் சரிவு இலா வஞ்சம் மாயம் சகுனியும் -
(தனது) செய்தொழிலிற் சிறிதும் பின்வாங்குதலில்லாத மிக்க
வஞ்சனையையுடைய சகுனியும், தம்பிமாரும் -(துச்சாதனன் முதலிய தனது)
தம்பியரும், விரிவு இலா மனத்தோடு எண்ணும்-விசாலமின்றிச் சுருங்கிய
மனத்தினால் எண்ணுகின்ற, விசாரமே-ஆலோசனையே, விசாரம் ஆக -
(அக்காலத்துக்குத் தக்க) ஆலோசனையாக முடிய, வரி விலான்-கட்டமைந்த
வில்லையுடையவனாகிய துரியோதனன், 'ஈண்டு - இவ்விடத்தில், விரைவின் -
விரைவிலே, ஓர் மண்டபம் சமைக்க - ஒரு மண்டபத்தைக் கட்டியமைப்பீராக,'
என்றான்-என்று (அந்தச் சபையில் வந்திருந்த அரசர்கட்குக்)
கட்டளையிட்டான்; (எ - று.)    

     புரிவு இலா மொழி விதூரன் -மாறுபாடில்லாமல் [நேராக] சொன்ன
சொற்களையுடைய விதுரன் எனவும், புரிவில் ஒன்றும் சரிவு இலா -
(துரியோதனனிடத்துக் கொண்ட) அன்பிற் சிறிதும் தளர்தலில்லாத எனவுங்
கொள்ளலாம்.  விரிவிலா மனம் - வருங் காரியங்களைக் காரணகாரியத்
தொடர்ச்சியாக ஆராயுத் திறமில்லாத மனம்.  விசாரம் - ஆலோசனை.
நீண்ட ஓர் மண்டபம் என்று பிரித்துப் பொருள் கூறலுமாம்.
நீண்ட+ஓர்=நீண்டோர்: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  விதூரன் -
நீட்டல் விகாரம்.  வஞ்சம் மாயம் - ஒருபொருட்பன்மொழி.        (196) 

44.-இதுவும், அடுத்த கவியும் - மண்டபங்கட்டியதைக் கூறும்.

பெருந்தகை யேவன் மாற்றம் பிற்பட முற்பட் டோடி
இருந்ததொல் வேந்தர் தத்த மிருக்கையி னியன்ற வெல்லாம்