அருந்திறன் மள்ள ராலு மணிமணித் தேரினாலும் பொருந்தவே கொணர்வித் தாங்கட் பொற்சுவ ரியற்றி னாரே. |
(இ - ள்.) இருந்த தொல் வேந்தர் -(அச்சபையில்) வந்திருந்த நெடு நாள் பழகிய நட்புரிமையையுடைய அரசர்கள், பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட - பெருமைக்குணமுடையவனான துரியோதனனது கட்டளைச் சொல் பின்னிடும்படி, முற்பட்டு ஓடி - விரைந்து சென்று, தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம் - தங்கள் தங்கள் இருப்பிடங்களிற் பொருந்திய எல்லாப் பொருள்களையும், அரும் திறல் மள்ளராலும் - மிக்க வலிமையமைந்த வேலையாட்களைக் கொண்டும், அணி மணி தேரினாலும் - அழகிய மணிகள் கட்டிய தேர்களில் ஏற்றியும், பொருந்தவே - கொணர்வித்துத் தகுதியாகக்கொண்டு சேர்த்து,- ஆங்கண்-அவ்விடத்தில் [அல்லது அப்பொழுது,] பொன் சுவர் இயற்றினார் - பொன்னினாற்சுவரை யெழுப்பினார்கள்; (எ - று.) முதலடியில், துரியோதனன் வார்த்தையாகிய காரணத்தைப் பின்னும் அதன் காரியமாகிய அரசர்கள் செல்லுதலை முன்னும் நிகழ்ந்தனவாக விரைவு தோன்றக் கூறியது, முறையிலுயர்வுநவிற்சியணி. வேந்தர் பொற்சுவ ரியற்றினார்-ஏவுதற்கருத்தாவின் வினை; சிற்பிகளைக்கொண்டு இயற்றின ரென்க. பெருந்தகை - ராஜராஜ னென்றவாறு: பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பிற்படமுற்பட்டு - தொடைமுரண். இருக்கை - இருப்பிடத்திற்குத் தொழிலாகுபெயர். இயன்ற - பலவின்பால் வினையாலணையும்பெயராகவேனும் பெயரெச்சமாகவேனும் கொள்ளத்தக்கது. ஆங்கண் - அக்கண் என்பது நீட்டலும் மெலித்தலும் பெற்றது. (197) | 45. | சங்கையில் சிற்ப நுண்ணூற் றபதியர் தகவு கூரச் செங்கையி னமைத்த கோலச் சித்திரத் தூண நாட்டி அங்கையி லருண ரத்நத் தணிகொளுத் திரமு மேற்றிக் கங்கையி னுயர்ந்த முத்தின் கற்றையான் முற்றும் வேய்ந்தார். | (இ - ள்.) சங்கை இல் சிற்பம் நுண்நூல் தபதியர் - சந்தேகமில்லாமல் நுட்பமான சிற்பசாஸ்திரத்தில் வல்லவர்களாகிய சிற்பிகள்,-தகவு கூர - அழகு மிகும்படி, செம் கையின் அமைத்த - செவ்விய [பழகித்தேர்ந்த] (தமது) கைகளினாற் செய்த, கோலம் சித்திரம் தூணம் - அழகிய சித்திர வேலைத்திறமமைந்த தூண்களை, நாட்டி - நிறுத்தி, அங்கு - அவ்விடத்து, ஐயில் அருணம் ரத்நத்து - அழகிய சிவந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற, அணி கொள் உத்திரமும் - அழகுகொண்ட உத்திரங்களையும், ஏற்றி-, கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் - கங்கையில் தோன்றிய சிறந்த முத்துக்களின் தொகுதியினால், முற்றும் வேய்ந்தார் - (மேலிடம்) முழுவதையும் மூடினார்கள்; (எ - று.) இவ்வாறு செல்வமிகுதி தோன்றக்கூறுதல், வீறுகோளணி யெனப்படும். இச்செய்யுளில், முதலெழுத்து நீங்க இரண்டு |