பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 212

சொன்னவைக் கேற்ற தென்று தொழுதகு தாதை தன்பான்
மின்னைவைத் தொளிரும் வேலான் மேவினன் விளம்ப
                                         லுற்றான்.

     (இ - ள்.) 'மன் அவைக்கு ஆன பைம்பொன் மண்டபஞ்சமைந்தது -
அரசர்களது சபைக்குத் தகுந்த பசும்பொன்மயமான மண்டபம் கட்டப்பட்டுச்
சித்தமாயிற்று,' என்று-, தன் அவைக்கு உரியோர் சொல்ல - தனது சபைக்கு
உரியவர்கள் தெரிவிக்க,-மின்னை வைத்து ஒளிரும் வேலான் - மின்னலை
யொத்து விளங்குகின்ற வேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
சகுனியும் தானும் நோக்கி - சகுனியும் தானுமாக (அம்மண்டபத்தினழகைப்)
பார்த்து, சொன்னவைக்கு ஏற்றது என்று - ('நாம் ஆலோசித்துச்)
சொன்னவற்றிற்குத் தக்கபடி அமைந்துள்ளது' என்று வியந்து கூறி, தொழுதகு
தாதை தன்பால் - (தன்னால்) வணங்கத்தக்க (தனது) தந்தையான
திருதராட்டிரனிடத்து, மேவினன் - சென்று சேர்ந்தவனாய், விளம்பல் உற்றான்-
கூறத் தொடங்கினான்;  (எ - று.)  - அதனை அடுத்த கவியிற் காண்க. 

     மன் அவை - ராஜசபை.  'தன் அவைக்குஉரியோர்' என்றது, கீழ் 44-
ஆஞ் செய்யுளில் 'இருந்த தொல் வேந்தர்' என்றபடி அவன் சபையிலே
யிருந்தவர்களும் அவனாற்கட்டளையிடப் பெற்றவர்களுமான அரசர்களை.
"வைத்து" என்றது, உவமவாசகமாய் நின்றது.  'சொல் நவைக்கு ஏற்றது' என்று
எடுத்து, (தன்வருணனையைச் சரிவர எடுத்துக் கூறுவதற்கு உரிய
சொல்லில்லாமையாற்) சொல்லைப் பழுதுபடச்செய்வது அம்மண்டபம்
என்றுமாம்.  மேவினன் - முற்றெச்சம்.                           (200) 

48.-பாண்டவரை வருவிக்கத் தூதரையனுப்பவேண்டுமெனல்.

அரும்பெற லைய கேட்டி யடியனேன் கருத்து முற்றக்
கரும்புய றவழுஞ் சென்னிக் கதிர்மணிக் கூட மொன்று
பெரும்புகழ் நகரி னீண்டுச் சமைத்தனன் பெருமை காண
வரும்படி தூதொன் றேவுன் மைந்தரை விரைவி னென்றான்.

     (இ - ள்.) 'பெறல் அரும் ஐய -பெறுதற்கு அரிய தந்தையே! கேட்டி -
(யான் சொல்வதைக்) கேட்பாயாக:-அடியேன் கருத்து முற்ற - எனது எண்ணம்
நிறைவேறும்படி, கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று-
கருமையாகிய மேகங்கள் தவழப் பெற்ற சிகரத்தையுடைய ஒளி பொருந்திய
இரத்தினமயமான ஒரு மண்டபத்தை, பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன்
- மிக்க கீர்த்தியுடைய இந்நகரத்தில் இப்பொழுது (யான் புதிதாகக்) கட்டி
முடித்தேன்;  பெருமை காண - (அம்மண்டபத்தின்) சிறப்புக்களைக் காணுதற்கு,
உன் மைந்தரை-உனது (தம்பியின்) புதல்வர்களாகிய பாண்டவர்களை, வரும்படி
- (இவ்விடத்துக்கு) வருமாறு, விரைவின் - விரைவிலே, தூது ஒன்று ஏவு -
(அவர்கட்கு) ஒரு தூதனை அனுப்புவாயாக,' என்றான் - என்று கூறினான்,
(துரியோதனன்);