பழியிலா விசைகொ ணீதிப் பாண்டவர் வந்துன் மைந்தர் வழியிலா யொழுகும் வண்ண மருட்டிநீ கொணர்தி யென்றான். |
(இ - ள்.) விழி இலா வென்றி வேந்தன்- கண்ணில்லாத வெற்றியையுடைய திருதராட்டிரன்,- விதுரனை அழைத்து-, 'நீ போய் மொழியில் - நீ (தூது) சென்று சொன்னால், உலகில் உன் மொழியினை மறுக்கவல்லார் ஆர் - இவ்வுலகத்தில் உனதுவார்த்தையைத் தடுத்து மாறுகூறவல்லவர் யாருளர்? (ஆகையால்), [பாண்டவர்களும் கேட்டு அதன்படியே நடப்பார்கள் என்றபடி:]; பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் - பழிப்பில்லாத கீர்த்தியைக் கொண்டவர்களும் நீதிநெறி தவறாதவர்களுமான பாண்டவர்கள், வந்து - இங்குவந்து, உன் மைந்தர் வழியில் ஆய் ஒழுகும் வண்ணம் - உனதுமக்களாகிய துரியோதனாதியர் விரும்பியுள்ள வழியில் நடந்திடுமாறு, மருட்டி - (உனது சொல்திறத்தால் அவர்களை) மருளச்செய்து இசைவித்து, நீ கொணர்தி - நீ இங்கே அழைத்து வருவாயாக,' என்றான்-; (எ- று.) அக்கிரமவழியிற் செல்லுந் தனதுமைந்தர்க்கு உடந்தையாய் நற்புத்தி சிறிதுமின்றித் தம்பிமைந்தரைக்கெடுக்கக் கூறப்புகுந்தானாதலின், இங்கு அத்திருதராட்டிரனை ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணுமில்லாதவ னென்பார், 'விழியிலாவேந்தன்' என்றார். இங்கு, 'விழியிலா' என்ற அடைமொழி இவ்வாறு ஒருகருத்தை உட்கொண்டிருப்பது, கருத்துடையடைமொழியணியின்பாற்படும். இரண்டாமடி - விதுரனது சொல்வன்மையை விளக்கும். விதுரனுக்குத் துரியோதனாதியரிடத்து அன்பு உண்டாகுமாறு 'உன்மைந்தர்' எனத் தொடர்புபடுத்திக் கூறினான். மருட்டி, மருள் என்பதன் பிறவினையான் மருட்டு - பகுதி. மருட்டுதல் - மயக்குதல். (203) 51.- விதுரன் திருதராட்டிரனது ஓலைகொண்டு தூது செல்லுதல். தம்பியர் விழைவாற் கூடஞ் சமைத்தபே ரழகு காண இம்பர்வந் தெமையு மெய்தி யேகுக விரைவி னென்னப் பைம்பொனி னோலை மீது பண்புற வெழுதி யின்னே எம்பியு மேகு கென்றா னேவலி னவனும் போனான். |
(இ - ள்.) (தருமபுத்திரனே), '(நீ) - தம்பியர் - உனது தம்பியராகிய துரியோதனாதியர், விழைவால் - விருப்பத்துடனே, சமைத்த - கட்டிமுடித்த, கூடம் - மண்டபத்தினது, பேர் அழகு - மிக்க அழகை, காண - காணும்படி, விரைவின் - விரைவாக, இம்பர் வந்து - இந்நகரத்திற்குவந்து, எமையும் எய்தி - என்னையும் அடைந்து (பார்த்து), ஏகுக - செல்லக்கடவாய்', என்ன - என்று, பைம்பொனின் ஓலைமீது பண்புஉற எழுதி - பசும்பொன்னாற்செய்த |