பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 215

ஓலையில் அழகாக எழுதுவித்து, (அவ்வோலையைக்கொடுத்து), எம்பியும்
இன்னே ஏகுக என்றான் - எனது தம்பியாகிய நீ இப்பொழுதே
(தருமனிடத்துச்) செல்லக்கடவாய்' என்று கட்டளையிட்டான்;  ஏவலின் -
அக்கட்டளையினால், அவனும் - அவ்விதுரனும்;  போனான் -
(தருமபுத்திரனது நகரமாகிய இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச்)
செல்வானாயினான்; (எ - று.)

     விரும்பிக் காணத்தக்க பேரழகுடைய தென்பான் 'சமைத்த பேரழகு
காண' என்றும், மண்டபங்காணுதற்கு வராவிடினும் தன்னைப்பார்க்கவாவது
தவறாது வரவேண்டுமென்பான் 'எமையும் எய்தி' என்றும் எழுதினான்.  எழுதி
- இங்கு, ஏவுதற்கருத்தாவின் வினை.  எமையும்: உம்மை - இறந்தது தழுவிய
எச்சவும்மை.  இன்னே - விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  எம்பி-
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.  உம்மை - இசைநிறை.
எய்துதல் - சந்தித்தல்.  எமை=எம்மை; தனித்தன்மைப்பன்மை.     (204) 

52.-விதுரன் இந்திரப்பிரத்தநகரஞ் சேர்தல்.

காரெனக் களிறு சுற்றக் காற்றெனப் புரவி யீண்டத்
தேரினுக் கொருவன் றன்னைச் சிலம்பெனத் தேர்கள் சூழ
வீரரிற் பலரும் போற்ற விதுரனு மிரண்டு நாளாற்
பாரினுக் குயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்.

     (இ - ள்.) தேரினுக்கு ஒருவன் -தேர்வீரரிற்சிறந்தவனான விதுரனும்,-
தன்னை-, கார் என களிறு சுற்ற - மேகங்கள் போல யானைகள் சூழ்ந்து
வரவும், காற்று என புரவி ஈண்ட - காற்றுப்போலக் குதிரைகள் நெருங்கி
வரவும், சிலம்பு என தேர்கள் சூழ-மலைகளைப்போலத் தேர்கள் சுற்றிவரவும்,
வீரரிற் பலரும் போற்ற - காலாள்வீரர்களிற் பலபேர் புகழ்ச்சி கூறிவரவும்,
(இவ்வாறு), இரண்டு நாளால் - இரண்டுதினத்தில், பாரினுக்கு உயிரே போலும்
பாண்டவர் நகரி - உலகத்துக்கு உயிரைப்போன்றவர்களான பாண்டவர்கள்
வசிக்கின்ற இந்திரப்பிரத்தநகரத்தை, சேர்ந்தான்-; (எ - று.) 

     கருநிறத்திலும் மதமழை சொரிதலிலும் முழக்கத்திலும் யானைக்குக்
கார்மேகமும், விரைந்து செல்லுதலிற் குதிரைக்குக் காற்றும், வலிமையிலும்
பெருந்தோற்ற முடைமையிலும் தேர்க்கு மலையும் உவமை. உவமையணி.
தேரினுக்கு ஒருவன் - தேர்வீரர்களுட்சிறந்த அதிரதவீர னென்றபடி. 
ஒருவன்- ஒப்பற்றவன், அத்வீதீயன், ஏகவீரன்.  நாளால் -
உருபுமயக்கம். 'பாரினுக்குஉயிரேபோலும் பாண்டவர்' - உலகத்துமக்கள்
யாவரும் இப்பாண்டவர்களைநற்குணச்சிறப்பினால் தம்தம்
உயிர்போலவே நன்குமதித்துப் பாராட்டினரென்றவாறாம்.  இந்த
அடைமொழியை நகரிக்கு இயைத்தால், உடம்பினுள்உயிர் சிறந்த