தாவது போல, இவ்வுலகத்துள் இந்திரப்பிரத்தநகரம் சிறந்தது என்று கருத்துப்படும். உயிரே, ஏ - தேற்றத்தோடு உயர்வு சிறப்பு. (205) வேறு. 53.-விதுரன் இந்திரப்பிரத்தநகரத்தைக் காணுதல். புரிய மொண்கதிர் கவினுறு பொலிவினாற் பொன்னுலகாமென்ன, அரிய பைம்பொனின் பணிகளி னிறைந்தசீர ளகைமாநகரென்னத், தெரியு மன்புட னறங்குடி யிருப்பதோர் தெய்வவான் பதியென்ன, விரியும் வெண்கொடிப் புரிசைசூழ் வளநகர் விழிகளித்திடக்கண்டான். |
(இ - ள்.) புரியும் ஒள் கதிர் -வீசுகின்ற ஒள்ளிய கிரணமும், கவின் - அழகும், உறு - நிறைந்த, பொலிவினால் - சிறந்த தோற்றத்தை யுடைமையால், பொன் உலகு ஆம் என்ன - பொன்மயமான சுவர்க்கலோகம் போலவும்,- அரிய பைம்பொன் இன் பணிகளின் - அருமையான பசும்பொன்னினாலாகிய இனிய வேலைத்திறங்களையுடைமையால், நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன - நிரம்பிய செல்வத்தையுடைய சிறந்த அளகாபுரி போலவும்,- (தருமம் சிறிதுந்தவறாத கருணைக்கடலான தருமபுத்திரன் அரசு வீற்றிருக்கப்பெற்றதனால்), தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வம் வான்பதி என்ன - விளக்கமாகத்தெரிகின்ற [மிகுதியான] அன்பினுடனே தருமதேவதை நிலையாகத் தங்கி வசித்திருக்கப்பெற்றதொரு தெய்வத்தன்மையுள்ள சிறந்த நகரம் போலவும் (இருக்கிற), விரியும் வெள் கொடி புரிசை சூழ் - (காற்றடிக்கும் போது அசைந்து நீண்டு) பரவிவிளங்கும் வெண்ணிறமான துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்கள் சூழ்ந்ததும், வளம்நகர் - எல்லாவளங்களையு முடையதுமான (இந்திர்பிரத்த) நகரத்தை, விழிகளித்திட கண்டான் - (தன்) கண்கள் களிப்படையுமாறு பார்த்திட்டான்; (எ - று.) துரியோதனாதியரது தூண்டுதலின் படி திருதராட்டிரனேவிய கட்டளையைச் சிரமேற்கொண்டு தொன்றுதொட்டு இராசதானியான சிறந்த அத்தினாபுரியை விட்டுக் காண்டவப்பிரத்தமென்னுங்கடுங்காட்டிற் சேர்ந்த தனது அருமைத்தமையன்மக்களாகிய பாண்டவர்க்குப் பகவானருளால் அங்கு இவ்வகையான அற்புத திவ்விய நகரம் அமைந்த திறத்தைக் குறித்து விதுரன் அந்நகர்ச்சிறப்பைக் காணுந்தோறும் மனத்தில் மேன்மேற்கொள்ளும் ஆனந்தத்தின் மிகுதிவிளங்க, 'வளநகர் விழிகளி்த்திடக் கண்டான்' என்றனரென்க. அருட்குக்காரணமாகிற அன்பு, அறத்துக்கு இன்றியமையாத தாதலால், 'அன்புடன் அறங்குடியிருப்பது' எனப்பட்டது. தருமபுத்திரன் அரசாளுதலால் எல்லாத் தருமங்களுங் குறைவற நடக்கப்பெற்ற நகரமென்பதுபற்றி, தருமதேவதை குடியிருக்கிற திவ்வியநகரம் இதற்கு உவமை |